காங்கேயம் அருகே, ஜல்லி கிரஷர் ஆலையில் வடமாநில தொழிலாளி அம்மிக்கல்லால் அடித்துக்கொலை
காங்கேயம் அருகே ஜல்லி கிரஷர் ஆலையில் வடமாநில தொழிலாளி அம்மிக்கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உடன் தங்கியிருந்து வேலை செய்து வந்த அவரது உறவினர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சேர்வழி என்ற கிராமத்தில் பண்ணாரி அம்மன் கிரஷர் என்ற ஜல்லி பெயரில் கற்கள் உடைக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 30–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் பீகார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த 5 குடும்பத்தினர் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு ஒடிசா மாநிலம் தேன்கனை மாவட்டம் கண்டபாய் பகுதியை சேர்ந்த சந்தோஷ் நாயக் (வயது 25) என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். அவருடன் அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த பிஜூ மற்றும் காளியா ஆகியோரும் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்.
அவர்களுக்கு அந்த பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோஜா என்ற பெண் சமையல் செய்து கொடுத்து வந்துள்ளார். இதற்காக அந்த பெண்ணுக்கு பணமும் கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றுகாலை ரோஜா சமையல் செய்வதற்காக சந்தோஷ் நாயக் அறைக்கு சென்றார். அப்போது அவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரோஜா இது குறித்து ஆலையின் உரிமையாளர் ஸ்ரீதர் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். மேலும், இது குறித்து காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தோஷ் நாயக்கை கொலை செய்தது, அவருடன் தங்கி வேலை பார்த்து வந்த அவரது உறவினர்கள் பிஜூ மற்றும் காளியா என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
சந்தோஷ் நாயக் கடந்த சில மாதங்களாக காங்கேயத்தில் கிரஷர் ஆலையில் வேலை செய்து வந்துள்ளார். இதன் பின்னர் அவர் கடந்த வாரம் சொந்த ஊருக்கு சென்ற போது அவரது உறவினர்களான பிஜூ மற்றும் காளியா ஆகியோரை தன்னுடன் வேலைக்கு அழைத்து வந்துள்ளார். 3 பேரும் ஆலை தொழிலாளர்களுக்கென கட்டப்பட்டுள்ள அறையில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காங்கேயத்தில் திங்கட்கிழமை வாரச்சந்தைக்கு 3 பேரும் சென்று, தேவையான பொருட்களை வாங்கி வந்துள்ளனர். வரும் போது 3 பேரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் காலையில் பார்க்கும்போது சந்தோஷ் நாயக் அம்மி கல்லை மார்பில் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த அம்மி கல் ரத்த கறையுடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே கிடந்துள்ளது. அவருடன் தங்கியிருந்த 2 பேரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும் எனவும், எதற்காக இந்த கொலை நடந்தது எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு திருப்பூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது.
அந்த நாய் கொலை நடந்த அறையில் இருந்து சிறிது தூரம் ரோட்டில் ஓடிச்சென்று, குப்பை நாயக்கன்வலசு என்ற ஊருக்கு செல்லும் பிரிவில் நின்றது. மேலும் திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பிஜூ மற்றும் காளியா ஆகியோரை வலைவீசி தேடிவருகிறார்கள்.