பூட்டி கிடக்கும் மாநகராட்சி சிறுவர் கழிவறையை திறக்க நடவடிக்கை


பூட்டி கிடக்கும் மாநகராட்சி சிறுவர் கழிவறையை திறக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2018 4:30 AM IST (Updated: 6 Jun 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூரில் பூட்டி கிடக்கும் மாநகராட்சி கழிவறையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை பெரம்பூர் ஜமாலியா நெடுஞ்சாலையில் முரசொலி பூங்கா அருகில் சிறுவர்களுக்கான கழிவறை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கழிவறை பெரும்பாலான நாட்களில் பூட்டப்பட்டு கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இதனால் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அப்பகுதி சிறுவர்கள் வேறு வழியின்றி சாலையோரம் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிக்கிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது.

சுற்றுச்சூழல் தினம் என்று ஆங்காங்கே பேனர் வைத்து பெயரளவிற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஆனால் சுற்றுச்சூழல் விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை. இதுகுறித்து கேட்டால் நிதி இல்லை, ஆட்கள் பற்றாக்குறை என்று காரணம் கூறுகிறார்கள்.

குறிப்பாக வடசென்னை பகுதியில் பெரும்பாலான மாநகராட்சி கழிப்பிடங்கள் பூட்டியே கிடக்கின்றன. கழிவறைகளை மக்கள் பயன்பாட்டிற்கு ஏன் திறக்கவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினால், தண்ணீர் இல்லை, பராமரிக்க நிதி இல்லை என்று காரணம் கூறுகின்றனர். இதனால் இயற்கை உபாதை கழிக்க திறந்திருக்கும் மாநகராட்சி கழிவறைகளை தேடி தேடி போக வேண்டி உள்ளது.

சிறுவர்கள் வேறு வழியின்றி திறந்தவெளியை பயன்படுத்த வேண்டியுள்ளது. நவீன இலவச கழிவறை என்ற பெயரை மட்டும் வைத்துவிட்டு தண்ணீர் இல்லாமல் பூட்டிகிடக்கும் கழிவறையை வைத்து நாங்கள் என்ன செய்வது?. மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story