கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வினர்


கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வினர்
x
தினத்தந்தி 6 Jun 2018 3:30 AM IST (Updated: 6 Jun 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் சிலர் நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். பின்னர் அங்கு தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வந்து, உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் பெரியகுளம் பகுதியில் தனிநபர் இல்லக் கழிப்பிடம் கட்டிய பயனாளிகளுக்கு நிதிஉதவி கிடைக்கவில்லை என்றும், நிதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களிடம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் பயனாளிகளுக்கு நிதி வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கூறுகையில், ‘பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பெரியகுளம் பகுதியில் 11 கிராம ஊராட்சிகளில் தனிநபர் கழிப்பிடம் கட்டிய பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்படாமல் உள்ளது. உடனே நிதியை வழங்க வேண்டும். இந்த பகுதியில் பணிகளை தமிழக கவர்னர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்’ என்றனர்.


Next Story