கூடலூர் சாலையில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி நின்ற கேரள அரசு பஸ்
கூடலூர் சாலையில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் கேரள அரசு பஸ் உரசி நின்றது. அதிர்ஷ்டவசமாக மின்சாரம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூரில் இருந்து 2–ம் மைல், தேவர்சோலை வழியாக சுல்தான்பத்தேரிக்கு சாலை செல்கிறது. இருமாநிலங்களை இணைக்கும் சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள், பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் 2–ம் மைல் பகுதியில் சாலையோரம் தாழ்வாக மின்கம்பிகள் சென்றது. நேற்று முன்தினம் பகல் 2.30 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு கேரள அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
கூடலூர் 2–ம் மைல் பகுதியில் கேரள அரசு பஸ் வந்தது. அப்போது எதிரே வந்த வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் சாலையோரம் பஸ்சை ஓட்டினார். அப்போது தாழ்வாக சென்ற மின்கம்பி மீது பஸ் உரசியது. மேலும் மின்கம்பியும் அறுந்து விழுந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக கூடலூர் பகுதியில் காலை முதல் மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் பஸ்சில் மின்கம்பி உரசியதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மின்கம்பியை அறுந்த விஷயத்தில் கேரள பஸ் டிரைவருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைகண்ட பொதுமக்கள் இருதரப்பையும் சமாதானம் செய்தனர். பின்னர் கேரள அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.