கோவை குறிச்சி குளத்தை சுற்றிலும் இசைநீரூற்று, பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமையும் பசுமைப்பூங்கா
இசைநீரூற்று, பொழுது போக்கு அம்சங்களுடன் கோவை குறிச்சி குளத்தை சுற்றிலும் பசுமைப்பூங்கா அமைக்கப்பட உள்ளது.
கோவை,
கோவை நகரின் தெற்குப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக குறிச்சி குளம் திகழ்கிறது. 343 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த குளம் 55 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரும்போது குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வருவதற்கான நீர் வழித்தடங்கள் உள்ளன. நீர்வழித்தடங்கள் முன்பு அடைபட்டு கிடந்தன. தற்போது நீர்வழித்தடங்கள் ஓரளவு அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த குளத்தின் மூலம் குறிச்சி, குனியமுத்தூர், போத்தனூர் உள்பட கிணத்துக்கடவுவரை நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் குறிச்சி குளம் பாதுகாக்கிறது. தற்போது இந்த குளத்தில் நீர்மட்டம் குறைந்த அளவு காணப்படுகிறது. ஒருபுறம் நீரின்றி மைதானம்போல் காட்சி அளிக்கிறது. தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி இருப்பதால் இந்த ஆண்டு குறிச்சி குளத்துக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குளத்தில் நிலத்தடி நீர்வளத்தை பெருக்கி உலகத்தரம் வாய்ந்த பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பசுமைப்பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.
கோவை தெற்கு பகுதி மக்களின் நீண்டநாள் விருப்பமான குறிச்சி குளத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. குறிச்சி குளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், கரையினை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குளத்திற்கு வரும் கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் சிறு,சிறு சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தி, குளத்தை சுற்றி நடைபாதை, இசைநீரூற்றுகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் சைக்கிளில் செல்வதற்காக குளத்தை சுற்றிலும் ஓடுபாதை, சிறுவர் பூங்கா, சிறுவிளையாட்டு திடல்கள், பசுமைப்பகுதிகள், ஆண், பெண்களுக்கு தனித்தனியான உடற்பயிற்சி கூடம், உணவு வளாகம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த பசுமைப்பூங்கா குறிச்சி குளத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘குறிச்சி குளத்தில் பசுமைப்பூங்கா அமைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்படுவதுடன், கோவை நகரின் தெற்கு பகுதி மக்களுக்கு ஒரு சுற்றுலா மையம்போல் விளங்க உள்ளது. குறிச்சி குளத்துக்கு வரும் அனைத்து நீர்வழித்தடங்களும் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு நொய்யல் ஆற்றில் இருந்து நீர் வரும் வகையில் பராமரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
கோவை நகரை சுற்றிலும் 8 குளங்கள் உள்ளன. பொதுப்பணித்துறை வசம் இருந்த இந்த குளங்களை மாநகராட்சி வசம் எடுத்து, ஜவஹர்லால் நேரு நகர புணரமைப்பு திட்டத்தில் மேம்படுத்தப்படும் என்று கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் நடைபெறாத நிலையில், குறிச்சி குளத்தில் பசுமைப்பூங்கா அமைக்கப்படும் அறிவிப்பை கோவை நகர மக்கள் வரவேற்றுள்ளனர்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கோவை வாலாங்குளம் பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட மற்ற குளங்களையும் சீரமைக்க வேண்டும் என்று நகர மக்கள் விரும்புகிறார்கள்.