திருப்பரங்குன்றம் அருகே அரசு பஸ்–டேங்கர் லாரி மோதல்


திருப்பரங்குன்றம் அருகே அரசு பஸ்–டேங்கர் லாரி மோதல்
x
தினத்தந்தி 6 Jun 2018 3:30 AM IST (Updated: 6 Jun 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே அரசு பஸ் மீது டேங்கர் லாரி மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. அதிலிருந்து டீசல், பெட்ரோல் ஆறாக ரோட்டில் ஓடியது.

திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த கப்பலூர் சிட்கோ பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷனில் இருந்து 8 ஆயிரம் லிட்டர் டீசலும், 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோலும் நிரப்பிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி மதுரைக்கு புறப்பட்டு வந்தது. அந்த லாரியை சோழவந்தானை சேர்ந்த பாலமுருகன் (வயது 43) என்பவர் ஒட்டி வந்தார்.

இந்தநிலையில் மதுரையில் இருந்து திருமங்கலத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு அரசு பஸ் சென்றது. திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் நேதாஜிநகர் பஸ்நிறுத்தம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறிய டேங்கர் லாரி அரசு பஸ் மீது மோதியது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

பஸ்சின் முன்பக்ககண்ணாடிகள் நொறுங்கி சிதறியது. மோதிய வேகத்தில் டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. அதில் டீசல் மற்றும் பெட்ரோல் கசிந்து ரோட்டில் ஆறாக பெருக்கெடுத்து ஒடியது. அதைத்தொடர்ந்து மதுரை–திருமங்கலம் பிரதான சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து தென்பழஞ்சி ரோட்டில் தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி அய்யனார் கோவில் பிரிவு வழியாக வாகனங்களை திருப்பி அனுப்பி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் டேங்கர் லாரி கவிழ்ந்த பகுதியின் அருகே பெட்ரோல் பங்க் மற்றும் ஐ.டி.ஐ., கார் கம்பெனிகள் மற்றும் குடியிருப்புகள் இருந்ததால் திடீரென்று டேங்க் லாரி தீப்பிடித்து பரவி விடுமோ? என்ற அச்சமும் பதட்டமும் நிலவியது.

இதனால் அந்த பகுதியில் யாரையும் நெருங்க விடாமல் போலீசார் தடுத்தனர். மேலும் மதுரை, திருமங்கலத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ரசாயன கலவை மற்றும் சோப்பு நுரைகளை டேங்கர் லாரி மற்றும் ரோட்டில் பீச்சி அடித்து தீ பிடிப்பதை தவிர்த்து குளிர்ச்சியை ஏற்படுத்தினர். அதன்பின்பு டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story