டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்
டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் வசதி கேட்டு கிராம பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வன்னிவேலாம்பட்டி. இங்கு சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள பொதுமக்களுக்கு சேடபட்டி, ஆண்டிபட்டி கூட்டுகுடிநீர் மற்றும் உள்ளூர் ஆழ்குழாய் மூலம் குடிநீர் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆழ்குழாய் தண்ணீரும் நிலத்தடி நீர்மட்டம் குறைவால் நின்று விட்டது.
இதனால் கடந்த 20 நாட்களாக இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். குடிநீர் வருவதில்லை என்று யூனியன் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று கிராம பெண்கள் காலி குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சமயன், மாவட்ட குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் வன்னிவேலாம்பட்டி கிராமத்திற்கு விரைவில் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.