நாகர்கோவிலில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது- பரபரப்பு


நாகர்கோவிலில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது- பரபரப்பு
x
தினத்தந்தி 6 Jun 2018 4:15 AM IST (Updated: 6 Jun 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

காரின் அடிப்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர், காரில் புகை வருவது குறித்து கெர்ஷோவிடம் தெரிவித்தனர்.

நாகர்கோவில்,

தக்கலையை அடுத்த அழகியமண்டபம் அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் கெர்ஷோ (வயது 65). ஓய்வுபெற்ற மருந்தாளுனர். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக நேற்று மேக்காமண்டபத்தில் இருந்து காரில் நாகர்கோவிலுக்கு வந்தார். பார்வதிபுரத்தில் காரை நிறுத்தி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இந்தநிலையில் காரின் அடிப்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர், காரில் புகை வருவது குறித்து கெர்ஷோவிடம் தெரிவித்தனர். உடனே அவர் உறவினர் வீட்டில் இருந்து வெளியே வந்து காரை ‘ஸ்டார்ட்‘ செய்ய முயற்சி செய்தார். ஆனால், கார் ‘ஸ்டார்ட்‘ ஆகவில்லை. இந்த நிலையில் கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பதற்றமடைந்த அவர், காரை விட்டு இறங்கி உறவினர் வீட்டுக்குள் ஓடினார்.

இதற்கிடையே கார் முழுவதும் எரிய தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அதிகாரி துரை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இருந்தாலும் இந்த விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக காரின் டீசல் டேங்க் வெடித்து சிதறாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

காரில் உள்ள எலக்ட்ரானிக் வயர்களின் இணைப்பு கோளாறு காரணமாக காரில் தீப்பற்றி இருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story