சட்டசபையில் மணல் பிரச்சினை குறித்து காரசார விவாதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய நாராயணசாமி உறுதி
புதுவை சட்டசபையில் மணல் பிரச்சினை குறித்து காரசார விவாதம் நடந்தது. வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் நேற்று மணல் தொடர்பாக தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–
சிவா: புதுவையில் கடந்த சில நாட்களாக மணல் ஏற்றி வரும் வண்டிகளை பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். என்ன அடிப்படையில் அதை பிடிக்கிறார்கள்? அதற்கு சட்டத்தில் இடம் உண்டா? அதேநேரத்தில் புதுவையிலும் மணல் எடுக்கவிடுவதில்லை.
அமைச்சர் கமலக்கண்ணன்: இது மிக முக்கியமான பிரச்சினை. மணல் பிரச்சினையை தீர்க்க தமிழக முதல்–அமைச்சரை சந்தித்து பேச நமது முதல்–அமைச்சர், அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இப்போது புதுவையில் வெளியில் இருந்து மணல் எடுத்துவருவதையும் தடுக்கிறார்கள். பொதுமக்களை பாதிக்கும் இதை நிர்வாக தலைமையின் (கவர்னர்) பேச்சை கேட்டு அதிகாரிகள் செய்கிறார்கள்.
முதல்–அமைச்சர் நாராயணசாமி: மணல் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்–அமைச்சரை சந்தித்து பேச நேரம் கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் வேலைப்பளு காரணமாக இதுவரை நேரம் ஒதுக்கி தரவில்லை.
அன்பழகன்: புதுவையில் மணல் கொள்ளை காரணமாக இதுவரை 7 படுகொலைகள் நடந்துள்ளன. ஆற்றுப்படுகைகளில் நடைபெறும் மணல் திருட்டும் தடுக்கப்பட வேண்டும்.
அமைச்சர் கந்தசாமி: நமக்கு கிடைக்க வேண்டியதை மத்திய அரசும் தடுக்கிறது. மாநிலத்திலும் சிலர் தடுக்கிறார்கள். சட்டமன்றத்துக்கு சூனியம் வைத்துவிட்டார்கள்.
அமைச்சர் கமலக்கண்ணன்: இப்போது பிரச்சினையே மணல்தான். மணல் திருடப்படும் இடத்தில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஏதோ கஞ்சா கடத்தல்போல் இதற்காக அதிகார உத்தரவு போடும் நபர் இந்த மாநில வளர்ச்சிக்கு என்ன செய்தார்?
ஜெயமூர்த்தி (காங்); புதுச்சேரி வரும் மணலுக்கு வழக்குப்போடுவது என்ன நியாயம்?
அரசு கொறடா அனந்தராமன்: பலர் கடலூர் பகுதியில் இருந்து மணல் எடுத்து வருகிறார்கள். கவர்னர், கலெக்டர் கூறிவிட்டார்கள் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்த கலெக்டர் 2 வருடத்தில் எத்தனை முறை மக்களை சந்தித்து இருப்பார்?
என்.எஸ்.ஜே.ஜெயபால்: மணல் பிரச்சினை பல வருடமாக இருக்கிறது. மணல் நமது எல்லைப்பகுதியில் இருந்து வரவில்லை.
அன்பழகன்: ரங்கசாமி என்று ஆட்சியில் ஒருவர் இருந்தார். அப்போது எவ்வளவு வார வேண்டுமோ அவ்வளவையும் வாரிவிட்டார்.
(அதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்து, என்.எஸ்.ஜே.ஜெயபால் ஆகியோர் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்).
என்.எஸ்.ஜே.ஜெயபால்: அப்போது மணல் தட்டுப்பாடு ஏதும் இல்லை.
டி.பி.ஆர்.செல்வம்: மாட்டு வண்டிக்காவது மணல் அள்ள அனுமதி கொடுங்கள்.
சிவா: தமிழக பகுதியில் இருந்து வரும் மணலையும் தடுக்க வேண்டுமா?
எம்.என்.ஆர்.பாலன்: இதற்கு ஒரே தீர்வு வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்வதுதான்.
பாஸ்கர் (அ.தி.மு.க.): மணல் தட்டுப்பாட்டால் எனது தொகுதியில் மேம்பாலம், குடிநீர் தொட்டி கட்டுமானப் பணிகள் நடக்கவில்லை.
அமைச்சர் கமலக்கண்ணன்: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி இருந்தபோது புதுவைக்கு செல்லும் மணலை தடை செய்யவேண்டாம் என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருந்தார்கள். ஆனால் இப்போது மணல் தருவதில்லை. அதேபோல் இப்போதும் தீர்வு காணவேண்டும். மாநில நிர்வாகி (கவர்னர்) துணை தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தார் என்பதால் இப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் மணலை பார்த்தாலே வழக்கு போடுகிறார்கள்.
முதல்–அமைச்சர் நாராயணசாமி: கடந்த 5 மாதத்துக்கு முன்பு நடந்த தென்னிந்திய முதல்–அமைச்சர்கள் மாநாட்டில் மணல் பிரச்சினை, விமானநிலைய விரிவாக்கத்திற்கான நிலப்பிரச்சினை தொடர்பாக பேசினேன். அந்த மாநாட்டிற்கு தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். அப்போது இதுதொடர்பாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின் இதுதொடர்பாக பேச தமிழக முதல்–அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை.
தமிழக பகுதியில் இருந்து மணல் வந்தால் அனுமதிக்க வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளை அழைத்து கூறியுள்ளேன். அதேபோல் டயர் வண்டிகளையும் அனுமதிக்க சொல்லியுள்ளேன். இப்போது சிலர் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் உத்தரவு போடுகிறார்கள். அதை பார்த்துவிட்டு அதிகாரிகள் ஆட்டம் போடுகிறார்கள். நிர்வாகம் என்பது முறைப்படி நடக்கவேண்டும். நான் சொல்வது நடக்கவேண்டும் என்று சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார்கள். மத்திய அரசிடம் புகார் கூறினாலும் கண்டுகொள்ளவில்லை.
அன்பழகன்: கவர்னர் சர்வாதிகாரிபோல் செயல்படுவதாக முதல்–அமைச்சர் ஆதங்கப்படுகிறார். ஆனால் அவரது அமைச்சர்களே கவர்னரிடம் செல்கிறார்கள்.
நாராயணசாமி: உரிய அனுமதியோடு லாரியில் மணல் ஏற்றி வருவதையும் அதிகாரிகள் பிடித்துள்ளார்கள். அதிகாரத்தை தவறாக பயன்படுத்திக்கொண்டு சிலர் மாநில வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்துகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது என்று 3 மாதங்களுக்கு முன்பே முடிவெடுத்துவிட்டோம். அதற்கான விதிமுறைகளையும் வகுத்துள்ளோம். அதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. அரசுக்கு உரிய பங்குத்தொகையை கொடுத்துவிட்டு மணலை இறக்குமதி செய்துகொள்ளலாம்.
நான் ஏற்கனவே அவரவர் அதிகாரத்திற்குள் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளேன். அடுத்தவர் அதிகாரத்திற்குள் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தால் அதற்காக வருந்தவேண்டிய காலம் வரும். அதிகாரிகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். வாட்ஸ் அப்பில் யார் புகார் அனுப்பினாலும் அதை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பவேண்டும். தன்னிச்சையாக உத்தரவுபோட யாருக்கும் அதிகாரம் இல்லை.
சபாநாயகர் வைத்திலிங்கம்: பர்மிட்டோடு வரும் வாரியையும் அதிகாரிகள் பிடிக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இதுதொடர்பாக சட்டமன்ற புகார்கள் குழு விசாரிக்கவேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கலெக்டர், வருவாய்த்துறை செயலாளர் என யாராக இருந்தாலும் அழைத்து விசாரிக்கவேண்டும். இவர்கள் இஷ்டப்படி செய்வதால் முதல்–அமைச்சர், அமைச்சர்கள் மீது விழுகிறது. பழி ஓரிடம், பாவம் ஓரிடமாக சேர்கிறது. மணல் வண்டிகளை பிடிப்பது எந்த சட்டத்தின் அடிப்படையில் நடக்கிறது? யாரோ போட்ட உத்தரவுகளை தவறாக பயன்படுத்தி அதிகாரிகள் கொள்ளை அடிக்க பயன்படுத்துகிறார்கள். பாவத்தை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அமைச்சர்கள் தலையில் போடுகிறார்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.