அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் மாதாகோவில் தெருவை சேர்ந்த ஜேம்ஸ் (வயது 55). இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய மனைவி அமலா, ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், நான் உங்கள் மனைவிக்கு வருகிற கல்வியாண்டில் அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருகிறேன். அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என்று கூறினார்.
அதனை உண்மை என நம்பிய நான் சில மாதங்களுக்கு முன்பு அவரை வேலூருக்கு அழைத்து ரூ.5 லட்சம் கொடுத்தேன். இந்த நிலையில் கல்வியாண்டு தொடங்கிய பின்னரும் அவர் அரசுப்பள்ளியில் எனது மனைவிக்கு வேலை வாங்கி தரவில்லை.
இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு சரியான பதில் தெரிவிக்கவில்லை. எனவே நான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி தரும்படி கூறினேன். ஆனால் அவர் கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார். ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் கொடுத்த ரூ.5 லட்சத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
Related Tags :
Next Story