கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தும் பசுமை திட்டம்: வேலூர் அரசு பள்ளியில் செயல்படுத்தப்படுகிறது
கழிப்பறையில் இருந்து செப்டிக் டேங்க்கிற்கு வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதை மீண்டும் பயன்படுத்தும் பசுமை கழிவறை திட்டம் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக வேலூரில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
வேலூர்,
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது வீணாக தூக்கிவீசப்படும் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று உப்புதண்ணீர், சுவையில்லாத தண்ணீரை சுத்திகரிப்பு செய்து அதை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் கழிப்பறையில் இருந்து செப்டிக் டேங்க்கிற்கு வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதை மீண்டும் பயன்படுத்தும் பசுமை கழிவறை திட்டம் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக வேலூரில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களில் 500 பேர் மாணவிகள். மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தி வருகின்றனர். அதில் மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அதனை மரங்கள் மற்றும் செடிகளுக்கு பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது.
பொதுவாக கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் துர்நாற்றம் வீசும். கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் இருக்கும். வேறு எதற்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தமுடியாது. கழிவுநீர் கால்வாய்களில் விடப்படும். இதனால் தண்ணீர் வீணாகிறது. இதுபோன்று கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அதை பயன்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள மாணவிகள் கழிப்பறை அருகில் 12 அடி நீளம், 9 அடி அகலம், 4 அடி ஆழத்தில் ‘பயோசெப்டிக் டேங்க்’ கட்டப்பட்டு உள்ளது. பள்ளியில் படிக்கும் 500 மாணவிகளில் ஒருநாளைக்கு சுமார் 250 பேர் கழிப்பறையை பயன்படுத்துவதாக கணக்கிட்டு இந்த செப்டிக் டேங்க் கட்டப்பட்டுள்ளது.
இந்த கழிப்பறையில் இருந்து வரும் கழிவுகளால் செப்டிக் டேங்க் நிரம்புவதற்கு 2 மாதமாகும். இந்த செப்டிக் டேங்க்கில் பாக்டீரியாக்கள் விடப்படும். இந்த பாக்டீரியாக்கள், செப்டிக் டேங்க்கிற்குள் வரும் கழிவுகளை உணவாக உட்கொண்டுவிடும். இதனால் 2 மாதங்களுக்கு பிறகு தண்ணீர் மட்டும் வெளியேறும். இந்த தண்ணீர் சுத்தமான தண்ணீராக, துர்நாற்றமின்றி வெளியே வரும். இந்த தண்ணீரை பள்ளி வளாகத்தில் இருக்கும் மரங்கள் மற்றும் செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
இதுகுறித்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் தந்தைபெரியார் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியரும், எல்லையில்லா பொறியாளர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பிரவின்ராஜ் கூறியதாவது:-
கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கலாம். இதற்காக கடந்த 9 மாதங்களாக திட்டம் தீட்டி, அந்த திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளோம்.
கழிப்பறையில் விடுவதற்காக புனேயில் இருந்து பாக்டீரியாக்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. ரூ.90 ஆயிரத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது செயல்படுத்தும் இந்த திட்டத்தின்மூலம் செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறும் தண்ணீரை மரங்கள், செடிகளுக்கு பயன்படுத்தலாம். துர்நாற்றம் இருக்காது.
அதேபோன்று மற்றொரு தொட்டிகட்டி அதில் இந்த தண்ணீரை தேக்கி மோட்டார்மூலம் மீண்டும் செப்டிக் டேங்க் தொட்டிக்கு ஏற்றினால் மீண்டும் கழிப்பறையில் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். அதற்கு இன்னும் கூடுதல் செலவாகும். எனவே முதலில் செடிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இங்குதான்(வேலூரில்) செயல்படுத்தப்படுகிறது.
ஒரு வருடத்திற்கு சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கழிப்பறையில் பயன்படுத்தினால் அதில் 2,500 லிட்டர் தண்ணீர் மட்டுமே வீணாகும். மீதமுள்ள தண்ணீரை மீண்டும் கழிப்பறையில் பயன்படுத்தலாம். இதன்மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கமுடியும். 60 ஆண்டுகள் இந்த பயோசெப்டிக் டேங்க்கை பயன்படுத்தலாம் என்றார்.
இந்த திட்டத்தை வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுகழிப்பிடங்களில் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தினால் தண்ணீர் தட்டுப்பாடின்றி அதே தண்ணீரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். நிலத்தடிநீரை நம்பியிருக்கவேண்டியதில்லை.
Related Tags :
Next Story