ஆரணி அருகே பள்ளத்தில் பள்ளி பஸ் கவிழ்ந்தது: 4 மாணவர்கள் காயம்
ஆரணி அருகே பள்ளத்தில் தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்தது. இதில் 4 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
ஆரணி,
ஆரணி அருகே வந்தவாசி சாலையில் ஆகாரம் கிராமத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி பஸ் நேற்று காலை தேவிகாபுரம் கூட்ரோட்டில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 13 மாணவ-மாணவிகள் இருந்தனர்.
தேவிகாபுரம் கூட்ரோட்டில் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகள் கூச்சலிட்டனர்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பஸ்சில் சிக்கிய மாணவ-மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்த மாணவர்கள் யுவராஜ் (வயது 10), பிரதீன் (12), தனுஷ் (14) மாணவி பிரியதர்ஷினி (13) ஆகிய 4 பேரையும் மற்றும் பஸ்சில் வந்த மற்ற மாணவர்களையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் ஆரணி தாசில்தார் (பொறுப்பு) கிருஷ்ணசாமி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களிடம் நலன் விசாரித்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவர்கள் அனைவரும் வீடு திரும்பினர்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story