பிளாஸ்டிக் பொருட்களுக்கு கூடுதலாக 5 சதவீத வரி விதிக்கப்படும் குமாரசாமி தகவல்
கர்நாடகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கூடுதலாக 5 சதவீத வரி விதிக்கப்படும் என்று குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கூடுதலாக 5 சதவீத வரி விதிக்கப்படும் என்று குமாரசாமி கூறினார்.
கூடுதலாக 5 சதவீத வரிகர்நாடக அரசின் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள சவுடய்யா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு பேசியதாவது:–
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு கூடுதலாக 5 சதவீத வரியை விதிக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் கிராமப்புற குடிசை தொழில்களுக்கு ஊக்கம் அளித்ததாகவும் அமையும்.
தோல்வி அடைந்துவிட்டோம்பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த மத்திய–மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அவற்றை நிறுத்த முடியவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம். பிளாஸ்டிக் பொருட்களால் புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன. அதனால் அவற்றை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். பெங்களூருவில் சுத்தமான காற்று, நிலத்தடி நீர், வானிலை மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
முன்னதாக குமாரசாமி நேற்று காலை அவருடைய ஜே.பி.நகர் வீட்டின் அருகே ஒரு மரக்கன்றை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றினார். சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.