பெண்ணாடம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலி


பெண்ணாடம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 6 Jun 2018 4:00 AM IST (Updated: 6 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண்ணாடம், 

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மகன் ராஜ்குமார்(வயது 24). சென்னையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் விடுமுறை முடிந்ததும் ராஜ்குமார் பணிக்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் ராஜ்குமார் கல்லக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ராஜ்குமார் படிக்கட்டு அருகில் அமர்ந்தபடி பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரெயில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது படிக்கட்டு அருகில் அமர்ந்திருந்த ராஜ்குமார் எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஓடும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story