சிதம்பரத்தில் துணிகரம்: வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை, மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சிதம்பரத்தில் துணிகரம்: வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை, மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Jun 2018 4:15 AM IST (Updated: 6 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிதம்பரம்,

சிதம்பரம் கனகசபை நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்(வயது 58). இவர் கடந்த 3-ந்தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி லதாவுடன்(52) சென்னையில் உள்ள மகள் சரண்யா வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை கொளஞ்சியப்பனின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கொளஞ்சியப்பனுக்கும், சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் கொளஞ்சியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டுக்குள் சென்று பார்வையிட்டனர்.

அப்போது அறையில் இருந்த 3 பீரோக்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் 3 பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கைரேகை நிபுணர் குமார் கொள்ளை நடத்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கை ரேகைகளை சேகரித்தார்.

இதனிடையே கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் கொள்ளை நடத்த வீட்டில் இருந்து மெயின்ரோடு வழியாக மோப்பம் பிடித்தபடி ஓடியவாறு கனகசபை நகர் 7-வது குறுக்கு தெரு சந்திப்பு வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story