விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்


விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:15 AM IST (Updated: 6 Jun 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் 284 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இவற்றில் 80 கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மூடப்பட்டது. அதன் பின்னர் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்த கடைகளில் 30 டாஸ்மாக் கடைகள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி மூடப்பட்டது.

இந்நிலையில் நகர எல்லைக்குள் மாநில நெடுஞ்சாலையாக இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் வணிக பகுதியாக இருந்தால் அந்த இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று கடந்த மாதம் 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் மூடப்பட்ட 30 கடைகளையும் நகர எல்லைக்குள் படிப்படியாக திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்து முதல்கட்டமாக விக்கிரவாண்டியில் ஒரு கடையும், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் தலா 2 டாஸ்மாக் கடைகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு அருகில் நேற்று முன்தினம் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு விழுப்புரம் மேல்தெருவில் மற்றொரு டாஸ்மாக் கடையை திறந்தனர்.

இதையறிந்ததும் மேல்தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பகல் 12.30 மணியளவில் அந்த டாஸ்மாக் கடைக்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும், டாஸ்மாக் கடை செயல்பட எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் மது குடிக்க வருபவர்களால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், ஆகவே கடையை உடனடியாக மூடக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, சண்முகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், சிவானந்தம் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, டாஸ்மாக் கடையை உடனடியாக மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறிய பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த டாஸ்மாக் கடையின் கதவை போலீசார் இழுத்து மூடினர். அதன் பின்னர் பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story