பா.ஜனதா தலைவர் அமித் ஷா இன்று உத்தவ் தாக்கரேவுடன் சந்திப்பு தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க வாய்ப்பு
பா.ஜனதா தலைவர் அமித் ஷா இன்று(புதன்கிழமை) சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்திக்க உள்ளார்.
மும்பை,
பா.ஜனதா தலைவர் அமித் ஷா இன்று(புதன்கிழமை) சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்திக்க உள்ளார். இருவரும் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பால்கர் இடைத்தேர்தல்
பா.ஜனதா எம்.பி. சிந்தாமன் வாங்காமறைவை தொடர்ந்து நடைபெற்ற பால்கர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா தனித்தனியாக போட்டியிட்டன. இந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர காவித், சிவசேனா வேட்பாளர் சீனிவாஸ் வாங்காவை 29 ஆயிரத்து 572 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்தது. சிவசேனா கட்சி அடுத்து வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடப்போவதாக தொடர்ந்து கூறி வருகிறது.
அமித் ஷா சந்திப்பு
இந்தநிலையில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று(புதன்கிழமை) சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து மும்பையில் நிருபர்களை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கூறியதாவது:-
உத்தவ் தாக்கரேயை சந்திக்க அமித் ஷா தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை(அதாவது இன்று) மாலை அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் சிவசேனா தோற்றிருக்கலாம். ஆனால் நாங்கள்(சிவசேனா) லட்சக்கணக்கான வாக்குகளை பெற்று இருக்கிறோம். இது சிவசேனா கட்சி தேர்தலை தனித்து சந்திக்க முடியும் என்பதை காட்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி குறித்து...
இதற்கிடையே அமித் ஷா-உத்தவ் தாக்கரே சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா மந்திரி சுதிர் முங்கண்டிவார், இந்த சந்திப்புக்கும் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்பு இல்லை என கூறினார். மேலும் உத்தவ் தாக்கரேயை தவிர்த்து மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் அமித் ஷா சந்திக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்யுங்கள் என கட்சி நிர்வாகிகளை சமீபத்தில் கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது அமித் ஷா, உத்தவ் தாக்கரேயை சந்திக்க இருப்பதால் வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அவர்கள் ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Related Tags :
Next Story