பிரதீபாவின் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்: அஞ்சலி செலுத்திய பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி


பிரதீபாவின் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்: அஞ்சலி செலுத்திய பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 6 Jun 2018 4:30 AM IST (Updated: 6 Jun 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

மாணவி பிரதீபாவின் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த பெருவளுரை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் சொந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6.45 மணிக்கு பெருவளுர் கிராமத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர், பிரதீபாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் பிரதீபாவின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண தொகையையும் அவர் வழங்கினார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்யகோரி இன்று(அதாவது நேற்று) சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம். நீட் தேர்வினால் அன்று அனிதாவையும், இன்று பிரதீபாவையும் இழந்து இருக்கிறோம். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படுவதில்லை. எனவே இவரது சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமாகும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இந்த நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் தமிழகத்தில் இதுபோன்ற நரபலி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, செஞ்சி.மஸ்தான், மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா அஞ்சலி செலுத்தினார். இதேபோல் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

Next Story