ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது சிட்கோ ஊழியர்கள், போலீசார் மீது குடிசைவாசிகள் கல்வீசி தாக்குதல்


ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது சிட்கோ ஊழியர்கள், போலீசார் மீது குடிசைவாசிகள் கல்வீசி தாக்குதல்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:30 AM IST (Updated: 6 Jun 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது, குடியிருப்புவாசிகள் சிட்கோ ஊழியர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

மும்பை,

ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது, குடியிருப்புவாசிகள் சிட்கோ ஊழியர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சீனியர் இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று போலீசார் காயம் அடைந்தனர்.

ஆக்கிரமிப்பு

நவிமும்பை கோபர்கைர்னே 8-வது செக்டர் போன்கோடே சாலை பகுதியில் நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு (சிட்கோ) சொந்தமான இடம் உள்ளது. இங்கு சட்டவிரோத குடிசைகள் பெருகி வந்தன. இதுபற்றி சிட்கோவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் அண்மையில் இடித்து தள்ளப்பட்டன.

இந்த நிலையில், மீண்டும் குடிசைவாசிகள் சட்டவிரோதமாக குடிசைகளை அமைத்து வந்தனர்.

இதையடுத்து, நேற்று சிட்கோவினர் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி அமைக்கும் பணியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஈடுபட்டனர்.

கல்வீசி தாக்குதல்

அப்போது அங்கு திரண்ட குடிசைவாசிகள் சிட்கோ ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென கூட்டத்தில் இருந்தவர்கள் சிட்கோ ஊழியர்கள் மற்றும் போலீசாரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் கோபர்கைர்னே போலீஸ் நிலைய சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவாஜி அவாதே உள்பட மூன்று போலீசார் காயம் அடைந்தனர்.

கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

காயமடைந்த சீனியர் இன்ஸ்பெக்டர் சிவாஜி அவாதே உள்பட 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நவிமும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story