ஊதிய உயர்வு வழங்க கோரி தஞ்சையில், கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஊதிய உயர்வு வழங்க கோரி தஞ்சையில், கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2018 4:30 AM IST (Updated: 6 Jun 2018 10:45 PM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு வழங்க கோரி தஞ்சையில், கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,


தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தஞ்சையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். திருக்கோவில் முதுநிலை பணியாளர் சங்க மாநில துணை செயலாளர் சங்கர், திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் சம்பத்குமார், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், 7–வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் திருக்கோவில் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி பணிக்கொடை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


ஊதிய முரண்பாடுகளை களைய அரசாணைப்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் வரும் கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முதுநிலை பணியாளர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் நிர்வாகிகள் செல்வராஜ், முத்துகிருஷ்ணன், குமார், பரணிதரன் உள்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் இவர்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story