டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் ஓட்டு கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் செயல்படும் அரசு பள்ளிகள்
டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் ஓட்டு கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் செயல்படும் அரசு பள்ளிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பேரையூர், பி.தொட்டியபட்டி, கே.மீனாசிபுரம், சந்தையூர் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் ஓட்டை, உடைசலாகி, ஒழுகும் ஓட்டு கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. பேரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 280 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள 4 கட்டிடங்களில் 2 கட்டிடங்கள் ஓடுகள் வேயப்பட்டது. இந்த ஓட்டு கட்டிடங்கள் ஆங்காங்கு ஓடுகள் உடைந்தும், சேதமடைந்தும் உள்ளது.
இந்த கட்டிடத்தில் சுமார் 80 குழைந்தைகள் படித்து வருகின்றனர். இதே போல் கே.மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியும் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடமும் மழை காலத்தில் ஒழுகும் நிலையில் உள்ளது. மேலும் சந்தையூர், பி.தொட்டியபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களில் 2 கட்டிடங்களின் ஓடுகள் சேதம் அடைந்து உள்ளது.
சேதம் அடைந்த இந்த பள்ளி கட்டிடங்களில் மாணவர்கள் படிப்பதற்கு பயந்து வருகின்றனர். மீதம் உள்ள ஓடுகள் எப்போது விழுகும் என்ற உயிர் பயத்திலேயே மாணவர்கள் படித்து வருகின்றனர். சேதம் அடைந்த நிலை குறித்து அறிக்கையை கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு எடுத்து கூறியும் ஓட்டு கட்டிடங்களை மாற்றுவதாக தெரியவில்லை.
எனவே மாணவ–மாணவிகளின் பாதுகாப்பு கருதி ஓட்டு கட்டிடங்களை மாற்ற வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தமிழக அரசு கல்வித்துறையில் எத்தனையோ மாற்றங்கள் கொண்டு வரும் நிலையில், அடிப்படை விசயமாக இந்த பள்ளிகளின் ஓட்டு கட்டிடங்களையாவது சீரமைக்க முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.