கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் பணியாளர்கள் தர்ணா போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2018 4:00 AM IST (Updated: 7 Jun 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் பணியாளர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை டாடாபாத் சாலையில் நேற்று காலை தர்ணா போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்துக்கு கோவில் தொழிலாளர் யூனியன் மாநில துணை தலைவர் திருநாவுக்கரசு, மாநில அமைப்பாளர் ராமதுரை, முதுநிலை கோவில் பணியாளர் சங்கத்தை சேர்ந்த கபீர்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்துக்கு முதுநிலை கோவில் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் கோவில் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஏராளமான காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தற்காலிக ஊழியர்களை நியமித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேலும் கோவில் பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாடு உள்ளது. எனவே சம வேலை செய்பவர்களுக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் விரைந்து நிறைவேற்ற வேண்டும். கோவில் வருமானத்தில் இருந்தே பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. எனவே அரசுக்கு எவ்வித நிதி இழப்பும் ஏற்படாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story