நீட் தேர்வில் தோல்வி: தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபாவின் உடல் அடக்கம்


நீட் தேர்வில் தோல்வி: தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபாவின் உடல் அடக்கம்
x
தினத்தந்தி 7 Jun 2018 5:30 AM IST (Updated: 7 Jun 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்த மாணவி பிரதீபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது தொல்.திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று பிரதீபா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

மேல்மலையனூர்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவளுரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரதீபா(வயது 19). டாக்டராக வேண்டும் என்கிற கனவுடன் இருந்த இவர், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த 4-ந்தேதி இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பிரதீபாவின் சாவுக்கு நீதி கேட்டு உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். பின்னர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடலை வாங்க ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் மாணவியின் உடல் சொந்த ஊரான பெருவளுர் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அம்பேத்கர் நற்பணி மன்ற வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேற்று முன்தினம் பிரதீபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று பிரதீபாவின் உடலை அடக்கம் செய்வதாக இருந்தது. இந்த நிலையில் காலையில் பிரதீபாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், பிரதீபாவின் சாவுக்கு நீதி வேண்டும், அவரது குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.1 கோடியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங்கினர்.

இதில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைசெல்வம், வடக்கு மாவட்ட செயலாளர் சேரன், ஆரணி பாராளுமன்ற தொகுதி செயலாளர் நடராஜன், செஞ்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலசுந்தரம், நகர செயலாளர் சிவா, பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் கனல்திருமால் மற்றும் நடிகர் விஜய் நற்பணி மன்றத்தினர் இதில் பங்கேற்றனர். இவர்கள் பிரதீபாவின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை அடக்கம் செய்யப் போவதில்லை என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே மதியம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பெருவளுர் கிராமத்துக்கு வந்தார். அவர் மாணவி பிரதீபாவின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் போராட்டக்குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று அவர்களிடம் உறுதியளித்து விட்டு அங்கிருந்து சென்றார். தொடர்ந்து கலெக்டர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், மாணவி பிரதீபா மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அரசின் சார்பில் பிரதீபாவின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.7 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்து வருகிறது. எனவே இதுபோன்ற விபரீத முடிவுகளை மாணவர்கள் எடுக்க கூடாது. இங்கு போராட்டக்குழுவினர் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரை செய்வேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில் மாலை 4 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மாணவி பிரதீபா உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் போராட்டத்தை கைவிட்டு மாணவியின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கேட்டுக்கொண்டார். இதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாலை 5 மணிக்கு காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து மாணவியின் உடலுக்கு இறுதிசடங்கு செய்யப்பட்டது. பின்னர் மாலை 6.15 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு, அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

Next Story