பூங்கா ரெயில் நிலையத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி ரெயில் மறியல் போராட்டம்


பூங்கா ரெயில் நிலையத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2018 4:45 AM IST (Updated: 7 Jun 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

‘நீட்’ தேர்வில் தகுதி பெறாத விரக்தியில் விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்ததால், தமிழகத்தில் மீண்டும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளன.

சென்னையில் நேற்று பூங்கா ரெயில் நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்.எப்.ஐ.) 50 பேர் ஒன்று கூடினர்.

மத்திய-மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி பூங்கா ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து, தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘நீட்’ தேர்வை ரத்து செய்யவேண்டும், மாணவி பிரதீபா மரணத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கோஷமிட்டபடி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சிலர் மின்சார ரெயில் என்ஜினில் ஏறி போராடினர்.

இதையடுத்து போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்ய போலீசார் ஆயத்தமானார்கள்.

போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் கோஷமிட்டபடி படுத்தனர். அவர்களை குண்டுக்கட்டாக அப்புறப்படுத்திய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரையும் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பூங்கா ரெயில் நிலையத்தில் நடந்த ரெயில் மறியலால் நேற்று 10 நிமிடங்கள் மின்சார ரெயில் சேவை பாதித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story