லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய மேலாளர், செயலாளர் கைது
லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய மேலாளர், செயலாளர் கைது செய்யப்பட்டனர்.
திருப்போரூர்,
சென்னை சேப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். தனியார் கப்பல் சிக்னல் கேப்டன். இவர் காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் கிராமத்தில் புதிய மனை பிரிவு அமைத்துள்ளார். அதன் வரைபட அனுமதி வேண்டி கேளம்பாக்கம் ஊராட்சி செயலாளர் குமாரசாமியை அணுகி உள்ளார்.
வரைபட அனுமதி வழங்க வேண்டும் என்றால் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பூபதி (வயது 57) மற்றும் ஒரு சிலருக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி அதன் பின்னர் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வரைபட அனுமதி வழங்குவதாக பிரபாகரனிடம் குமாரசாமி கூறியதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத பிரபாகரன் இதுகுறித்து சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை பிரபாகரனிடம் கொடுத்து, அதை மேலாளர் பூபதி மற்றும் கேளம்பாக்கம் ஊராட்சி செயலாளர் குமாரசாமியிடம் வழங்கும்படி கூறினர்.
அந்த பணத்துடன் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று காலை சென்ற பிரபாகரன், அங்கு இருந்த மேலாளர் பூபதியிடம் பணத்தை கொடுக்க முயன்றார். அவர் புதுப்பாக்கம் ஊராட்சி செயலாளர் வடிவேலு (38) என்பவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.
வடிவேலுவுக்கு போன் செய்து வரைபட அனுமதி விஷயமாக பணம் கொடுப்பார்கள். வாங்கி வை என்று பூபதி போன் செய்தார்.
பின்னர் பிரபாகரன் புதுப்பாக்கம் ஊராட்சி செயலாளர் வடிவேலுவிடம் லஞ்ச பணம் ரூ.25 ஆயிரத்தை கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் வடிவேலுவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து லஞ்சபணம் ரூ.25 ஆயிரத்தை கைப்பற்றினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் பூபதியையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பூபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.