மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் சேர்க்கை கலெக்டர் தகவல்


மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் சேர்க்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2018 3:30 AM IST (Updated: 7 Jun 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் சேர்க்கை நடைபெற உள்ளது என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான விடுதியுடன் கூடிய அரசு சிறப்பு பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மையம் தாம்பரம் சானிடோரியம், ஜட்ஜ் காலனி, சேவை இல்லம் பின்புறம் செயல்படுகிறது. இங்கு 6 வயது முதல் 14 வயது வரை உடைய மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி மாணவ–மாணவிகள் விடுதியில் தங்க வைத்து சேர்க்கப்படுகிறார்கள். 22 வயது வரை உடைய மாணவ–மாணவிகள் பகல் நேர மாணவ– மாணவிகளாக சேர்க்கப்படுகிறார்கள்.

இங்கு சேரக்கூடியவர்களுக்கு அவர்களின் அறிவு திறனுக்கு ஏற்ப, சிறப்பு கல்வி, சுயசார்பாக செயல்படுவதற்கான பயிற்சிகள், இயன்முறை பயிற்சி, பேச்சு பயிற்சி போன்றவையும் கற்பிக்கப்படுகிறது. இந்த மாணவ– மாணவிகளுக்கு சீருடை, கல்வி உபகரணங்கள், பகல்நேர மாணவர்களுக்கு மதிய உணவு, அரசால் வழங்கப்படும் இலவச கல்வி உபகரணங்கள் போன்றவை வழங்கப்படுகிறது.

எனவே, விருப்பமுடைய மாற்றுத்திறனாளி மாணவ– மாணவிகளின் பெற்றோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி மருத்துவ சான்று, ஆதார் அட்டை, வயது சான்று, சிறப்பு கல்வி பயின்றவராக இருந்தால் பயிற்சி சான்று, 3 பாஸ்போட் சைஸ் புகைப்படம் போன்றவற்றுடன் திட்ட அலுவலர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனம், அரசு மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லம், ஜட்ஜ் காலனி, சேவை இல்லம் பின்புறம், தாம்பரம் சானிடோரியம், சென்னை என்ற முகவரியில் வருகிற 12–ந் தேதி நேரில் வந்து பயன் பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், செங்கல்பட்டு என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story