பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார பயணம், கின்னஸ் சாதனைக்கு முயற்சி


பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார பயணம், கின்னஸ் சாதனைக்கு முயற்சி
x
தினத்தந்தி 7 Jun 2018 3:45 AM IST (Updated: 7 Jun 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கூடலூரை சேர்ந்த பெண் ஒருவர் தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் மூலம் கின்னஸ் சாதனைக்கு அவர் முயற்சி செய்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியை சேர்ந்தவர் சைபி (வயது 45). இவர் தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் வசித்து வருகிறார். அவர் டெய்லரிங் வேலை செய்து வருகிறார். சைபி மோட்டார் சைக்கிளில் பல கிலோ மீட்டர் தூரம் சென்று சாகசங்களை செய்து உள்ளார். சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5–ந் தேதி சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சைபி சுற்றுச்சூழல் மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார பயணம் மற்றும் உலக சாதனை முயற்சிக்காக தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் செல்ல உள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சைபி விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் உலக சாதனை முயற்சியை ஊட்டியில் நேற்று தொடங்கினார். ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் நின்றபடியே ஓட்டிக்கொண்டு குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் சென்றார். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு 2 ஆயிரத்து 615 கிலோ மீட்டர் தூரம் சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வருகிற 13–ந் தேதி சென்னையில் அந்த பிரசாரம் நிறைவடைகிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் வழியாக சென்று சென்னையில் நிறைவடைகிறது.

இதுகுறித்து சைபி கூறியதாவது:– உலக சாதனை, கின்னஸ் சாதனை மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடிப்பதற்காக பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பிரசார பயணத்தை தொடங்கி உள்ளேன். நான் ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் சென்றபடி சாகசங்களை செய்து இருக்கிறேன். தற்போது பிரசார பயணம் வெற்றி அடைய முழு முயற்சியை எடுத்து உள்ளேன். இப்போதைய காலக்கட்டத்தில் இயற்கையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும். இயற்கையோடு பெண்மையை இணைந்து காக்க அனைவரும் முன்வர வேண்டும். ஆனால், நடைமுறையில் பெண்களை கருமுதல் கல்லறை வரை, அவர்களது கனவுகளை கலைக்கிறோம்.

இளம்பெண்கள் மனதில் தைரியம் கொண்டு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். மரங்கள், காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இந்தியாவில் பெண்கள் சுதந்திரமாக பயணம் செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணம் ஆகும். எனவே, கண் இமைபோல் பெண்களை பாதுகாப்பதோடு, செயற்கையால் இழந்த செழிப்பையும் மீட்க கரம் கோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story