வேலை வழங்க கோரி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அதிகாரி வீட்டை தொழிலாளர்கள் முற்றுகை


வேலை வழங்க கோரி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அதிகாரி வீட்டை தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Jun 2018 4:00 AM IST (Updated: 7 Jun 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை வழங்க கோரி தனி அதிகாரி வீட்டை தொழிலாளர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பில் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தொடங்கும் கரும்பு அறவை பணிகள் ஏப்ரல் மாதம் வரையில் நடக்கும். இவ்வாறு அறவை பருவம் முடிவடைந்தவுடன் ஒரு மாத விடுமுறைக்கு பின்னர் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு அழைக்கப்படுவார்கள்.

இவர்கள் அடுத்ததாக தொடங்க இருக்கும் அரவை பணிக்கு ஆலையை தயார் செய்யும் வகையில், எந்திரங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணியில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் ஒருமாத விடுமுறை முடிந்து விட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான(2018–19) அரவை பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த வேலையை தொடங்கிடும் பொருட்டு இதுவரைக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு அழைக்கப்படவில்லை.

இதுகுறித்து இங்கு பணிபுரிந்து வரும் 112 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு வந்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று ஒன்று திரண்டு வந்து, ஆலை வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள தனி அதிகாரியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

இதைடுத்து தனி அதிகாரி மணிமேகலை, தொழிலாளர் நல அலுவலர் பன்னீர்செல்வம், கரும்பு அலுவலர் ரவி கிருஷ்ணன் ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அபபோது இந்த மாதம் சென்னையில் சம்பந்தப்பட்ட துறையின் ஆணையர் மற்றும் தலைமை அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேசி, அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதை ஏற்று தொழிலாள்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story