டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு: கடையின் முன்பு விநாயகர் சிலையுடன் சாலை மறியல்


டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு: கடையின் முன்பு விநாயகர் சிலையுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Jun 2018 4:30 AM IST (Updated: 7 Jun 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடையின் முன்பு விநாயகர் சிலையுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வந்தவாசி,

வந்தவாசி காந்தி ரோட்டில் டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது. டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் சாலை மறியல், முற்றுகை போராட்டம் என நடத்தினர். இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவினால் கடை கடந்த மாதம் மூடப்பட்டது.

இந்த நிலையில் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடை விரைவில் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக காந்தி சாலை மற்றும் பொட்டி நாயுடு தெருவை சேர்ந்த பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அதிகாலையில் காந்தி சாலையில் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடையின் முன்பாக பீடம் கட்டி விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த கடையின் உரிமையாளர் சிலையை அகற்றி கடைக்கு சற்று தூரத்தில் வைத்தார்.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடையின் முன்பு கூடி, விநாயகர் சிலையை எடுத்து நடுரோட்டில் வைத்து சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பொற்செழியன், இன்ஸ்பெக்டர் கவுரி, சப் -இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story