பாதையில் முள்செடிகள் வெட்டிப்போட்ட தகராறில் தொழிலாளி கைதுண்டிப்பு; தந்தை-மகனுக்கு 7 ஆண்டு ஜெயில்


பாதையில் முள்செடிகள் வெட்டிப்போட்ட தகராறில் தொழிலாளி கைதுண்டிப்பு; தந்தை-மகனுக்கு 7 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 7 Jun 2018 3:45 AM IST (Updated: 7 Jun 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

தச்சுத்தொழிலாளி கையை வெட்டி துண்டாக்கிய தந்தை-மகனுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆரணி,

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி கம்மாளத் தெருவை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி (வயது 55). தச்சுத்தொழிலாளியான இவருக்கு வீட்டின் அருகிலேயே சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இவருக்கும் இவரது உறவினரான தேவராஜ் (55) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இது குறித்து அடிக்கடி அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி, தேவராஜும் அவரது மகன் ராஜாவும் (38) பஞ்சமூர்த்தி நிலத்துக்கு செல்லும் பாதையில் முள்செடிகளை வெட்டி போட்டுள்ளனர். இதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் நிலத்துக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டது. ஏன் இப்படி பாதையில் முள் செடிகளை வெட்டிப்போடுகிறீர்கள் என தேவராஜை பஞ்சமூர்த்தி கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த தேவராஜ் மற்றும் அவரது மகன் ராஜா ஆகியோர் கொடுவாளால் பஞ்சமூர்த்தியின் கையை துண்டாக வெட்டினர். உடனடியாக அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து அவரது மகன் ராஜ், களம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கையை துண்டித்தது, கொலை முயற்சியில் ஈடுபட்டது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேவராஜ் மற்றும் அவரது மகன் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை ஆரணி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் தேவராஜ் மற்றும் அவரது மகன் ராஜா ஆகியோருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி எஸ்.எழில்வேலவன் தீர்ப்பு கூறினார். இதனையடுத்து இருவரையும் போலீசார் வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். 

Next Story