ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: சிறையில் தற்கொலை செய்த கைதியின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டது
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக பாளை. சிறையில் தற்கொலை செய்த கைதியின் உடல் பாதுகாப்பாக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடம் அருகே உள்ள திரவியபுரத்தை சேர்ந்த ஏசுதாசன் மகன் பரத்ராஜா (வயது 36). தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சகோதரர் திருமணத்துக்காக பரோலில் வந்த அவர் கடந்த 22-ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார் என்று கூறி அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. பரத்ராஜா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பரத்ராஜா கடந்த 30-ந் தேதி சிறை வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 31-ந் தேதி பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பரத்ராஜாவின் சகோதரர் செல்வசவுந்தர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், பரத்ராஜா சாவில் மர்மம் இருப்பதால் அவருடைய உடலை தடய அறிவியல் துறை பேராசிரியர்கள் தலைமையில் மறு பிரேத பரிசோதனை செய்து கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடவேண்டும் என்று கூறி இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், பரத்ராஜாவின் உடலை தற்போதைய நிலையிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து பரத்ராஜாவின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story