சிறந்த படைப்புகள் குறித்து கலந்துரையாடல்: ‘நேரம் கிடைக்கும்போது தூத்துக்குடி வருவேன்’, மாணவியின் அழைப்புக்கு பிரதமர் மோடி பதில்
தூத்துக்குடி பள்ளி மாணவியின் அழைப்பை ஏற்று நேரம் கிடைக்கும்போது தூத்துக்குடிக்கு வருவேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
தூத்துக்குடி,
மத்திய அரசு மூலம் மாணவ-மாணவிகளின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்காகவும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தியாவில் உள்ள 5 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் நவீன ஆய்வகம் (அடல் டிரிங்கரிங் லேப்) அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வகங்களில் மாணவ-மாணவிகளே ஆய்வுகள் செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம். அதன்படி மாணவ-மாணவிகள் உருவாக்கிய கண்டுபிடிப்புகள் ‘அடல் மாரத்தான்‘ என்னும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியா முழுவதும் இருந்து 600 படைப்புகள் போட்டியில் இடம்பெற்றன. இதில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜீவிதா பெத்துக்கனி, சுரேகா ஆகியோர் உருவாக்கிய சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற்று இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்த படைப்பும் இடம்பெற்றது. இதில் சிறந்த 100 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. பின்னர் அந்த படைப்புகள் மேலும் மேம்படுத்தப்பட்டன. அதன்பிறகு 30 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் உருவாக்கிய கண்டுபிடிப்பும் தேர்வு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார். நேற்று அவர் கோவா, அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளி மாணவர்கள், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் ஆகியோருடன் ‘வீடியோ கான்பரன்சிங்‘ மூலம் கலந்துரையாடினார்.
தூத்துக்குடி பள்ளி மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியபோது முதலில் அவர் தமிழில் வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து அவர், ‘இந்த ஆய்வகம் பயன் உள்ளதாக இருக்கிறதா? இதனை எவ்வாறு பயன்படுத்தி வருகின்றனர்? இந்த ஆய்வகத்தில் படிப்பை தவிர வேறு எந்தவிதமான கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்? நீங்கள் இந்த கண்டுபிடிப்பு சம்பந்தமாக ஏதேனும் விவசாயியை பார்த்து உள்ளர்களா? உங்கள் வயதில் இதனை கண்டுபிடித்து இருப்பது மிகப்பெரிய சாதனை. இதனை நல்ல முறையில் மேம்படுத்த வேண்டும்‘ என்றார்.
அதற்கு பதிலளித்து மாணவி ஜீவிதா பெத்துக்கனி பேசும்போது, ‘ஆய்வகம் மிகவும் பயன் உள்ளதாகவும், நன்றாகவும் இருக்கிறது. இதன்மூலம் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்பெற்று வருகிறோம். இதனால் பல்வேறு படைப்புகளை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். நாங்கள் விவசாயிகளை சந்தித்து பேசி உள்ளோம். நீங்கள் எங்கள் பள்ளிக்கு வர வேண்டும். நீங்கள் தூத்துக்குடி வந்து எங்கள் ஆய்வகத்தை பார்க்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கையில், உங்கள் அழைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு நேரம் இருக்கும்போது, தூத்துக்குடி வந்து உங்களை சந்திப்பேன் என்றார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், நேர்முக உதவியாளர் சங்கரய்யா மற்றும் அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story