தூத்துக்குடி அண்ணாநகரில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆய்வு: தேசிய மனித உரிமை ஆணையத்தினர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை
தூத்துக்குடி அண்ணாநகரில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று ஆய்வு செய்தார். இதேபோல் தேசிய மனித உரிமை ஆணையத்தினர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி வந்த விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். மேலும், காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி விசாரணை நடத்தினார்.
நேற்று 3-வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார். அவர் குறுக்குச்சாலையில் துப்பாக்கி சூட்டில் பலியான தமிழரசன் வீட்டுக்கு சென்று உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து ஆணையத்தின் விசாரணைக்கு தைரியமாக வந்து நடந்த விவரங்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.
கடந்த 23-ந்தேதி தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள முகாம் அலுவலகத்தில் அலுவல் பணிகளை மேற்கொண்டார். மாலையில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார்.
இதேபோல், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் புபுல் தத்தா பிரசாத், ராஜ்பீர்சிங், லால்பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து பல்வேறு தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இறந்தவர்களின் உறவினர்கள், காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடமும், ஸ்டெர்லைட் குடியிருப்பில் உள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று 5-வது நாளாக விசாரணை நடந்தது. புபுல் தத்தா பிரசாத் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுவிட்டதால், தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் 4 பேர் மட்டும் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, கலவர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சில போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். போலீசார் தமிழில் கூறிய பதில்களை அதற்கென நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆணைய உறுப்பினர்களிடம் தெரிவித்தனர். அதனை ஆணையத்தினர் கவனமுடன் பதிவு செய்து கொண்டனர்.
தேசிய மனித உரிமை ஆணையத்தினர், 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்து உள்ளனர். இவர்கள் விசாரணையை முடித்துக்கொண்டு இன்று (வியாழக்கிழமை) டெல்லிக்கு திரும்புகின்றனர்.
Related Tags :
Next Story