அனைத்து நிறுவனங்களிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் பேட்டி
அனைத்து நிறுவனங்களிலும் கட்டாயமாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் குற்றங்களை குறைக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 74 வழக்குகளில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 3 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது 8 சோதனை சாவடிகள் இயங்கி வருகின்றன. இன்னும் கூடுதலாக 20 சோதனை சாவடிகள் வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபட கூடுதலாக 20 புதிய ‘பீட்’கள் உருவாக்கப்பட்டு உள்ளன. எனவே 24 மணி நேரமும் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் கடந்த 2 நாட்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் ஒருவர், லாரி திருட்டில் ஈடுபட்ட ஒருவர், சந்தேகத்துக்கு இடமான 3 பேர் மற்றும் சங்கிலி பறிப்புகளில் ஈடுபடும் சிலர் என பலர் பிடிபட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதுதவிர மாவட்டம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. குறிப்பாக அனைத்து வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட வர்த்தக ரீதியான அனைத்து நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று விதி உள்ளது. அந்த விதியை சுட்டிக்காட்டி ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக அந்தந்த பகுதி போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதுபோல் கிராமப்பகுதிகளிலும் பெரிய அளவிலான தோட்டங்கள் வைத்து விவசாயம் செய்து வருபவர்களும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது கேமராக்கள் பொருத்தி இருப்பவர்களும் 1.3 ‘மெகா பிக்சல்’ கேமராக்கள்தான் பொருத்தி உள்ளனர். இதில் பதிவாகும் படங்கள் தெளிவாக இருக்காது. எனவே 3 ‘மெகா பிக்சலுக்கும்’ அதிகமான திறன் கொண்ட கேமராக்கள் பொருத்த அனைவரும் முன்வரவேண்டும்.
ஈரோடு மாவட்டத்துக்கு 2 ஆயிரத்து 200 போலீசார் நியமிக்கப்பட வேண்டும். தற்போது 1,700 பேர் உள்ளனர். பற்றாக்குறை இருந்தாலும், மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பணியிடங்கள் திருப்திகரமாகவே உள்ளது. கூடுதல் தேவைகளுக்கு ஆயுதப்படை போலீசார் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
நக்சலைட் தடுப்பு பிரிவு, மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு உள்ளிட்ட சிறப்பு படைகளுக்கு ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் நடைமுறையில் இருந்த பாதுகாப்பு பணிகள் இன்னும் சற்று கூடுதலாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. எனவே வாகன சோதனை, ரோந்து ஆகிய பணிகள் அதிகரிக்கும். குற்றங்கள் தடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் கூறினார்.
Related Tags :
Next Story