கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி ‘காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் குமாரசாமி பேட்டி


கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி ‘காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2018 4:00 AM IST (Updated: 7 Jun 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி ‘காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மந்திரிசபை கூட்டத்திற்கு பின் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி ‘காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மந்திரிசபை கூட்டத்திற்கு பின் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

சிறிது தாமதம்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. 25 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட புதிய மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொதுவாக ஒரு புதிய ஆட்சி அமையும்போது, மந்திரிகள் நியமனம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். அதுவும் இது கூட்டணி ஆட்சி. இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சில விஷயங்கள் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிறிது தாமதம் ஆனது. ஆனால் கர்நாடகத்தில் ஆட்சி நிர்வாகம் நடைபெறவில்லை என்றும், குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது சரியல்ல.

1,500 குழிகள் மூடப்பட்டன

இப்போது நான் உள்பட மந்திரிசபையில் 27 பேர் உள்ளோம். மந்திரிசபை கூட்டத்தை நடத்திவிட்டு இங்கு வந்துள்ளேன். இந்த புதிய மந்திரிசபையில் அனுபவம் வாய்ந்தவர்களும், புது முகங் களும் உள்ளனர். நான் மற்றும் பரமேஸ்வர் பதவி ஏற்றதும் இதுவரை பல்வேறு துறை அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். பெங்களூருவில், சாலைகளில் குழிகள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன.

இதை சரிசெய்யும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். அதன்படி நான் பதவி ஏற்றது முதல் இதுவரை 1,500 குழிகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் 3,800 குழிகளை மூட வேண்டியுள்ளது. குழிகளை சரியான முறையில் மூட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

நிலையான ஆட்சியை நடத்துவோம்

கர்நாடகத்தில் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் நாங்கள் சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவோம். 2 கட்சிகளும் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை ஒருங்கிணைத்து அமல்படுத்துவோம். நாங்கள் 5 ஆண்டுகள் காலம் நிலையான ஆட்சியை நடத்துவோம். அதுமட்டுமின்றி அடுத்த தேர்தலுக்கு பிறகும் நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜனதா ஒரு மோசமான நிலையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. சட்டம்-ஒழுங்குக்கு பங்கம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை இங்கு வெளியிடாமல் இருந்தால் நல்லது என்று விநியோகஸ்தர்களுக்கு நான் கூறினேன். இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.

போலீஸ் பாதுகாப்பு

ஆயினும் கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவோம். ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் இன்று(அதாவது நேற்று) இரவோ அல்லது இன்று(வியாழக்கிழமை) காலையிலோ ஒதுக்கப்படும். அதன் பிறகு புதிய மந்திரிகள் தங்களின் பணிகளை தொடங்குவார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story