மராட்டிய அரசு போக்குவரத்து கழக பஸ் கட்டணம் 18 சதவீதம் உயர்கிறது மந்திரி திவாகர் ராவ்தே தகவல்


மராட்டிய அரசு போக்குவரத்து கழக பஸ் கட்டணம் 18 சதவீதம் உயர்கிறது மந்திரி திவாகர் ராவ்தே தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2018 4:15 AM IST (Updated: 7 Jun 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய அரசு போக்குவரத்து கழக பஸ் கட்டணம் 18 சதவீதம் உயர்த்தப்படும் என போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே கூறியுள்ளார்.

மும்பை, 

மராட்டிய அரசு போக்குவரத்து கழக பஸ் கட்டணம் 18 சதவீதம் உயர்த்தப்படும் என போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே கூறியுள்ளார்.

டீசல் விலை உயர்வு

உலக பொருளாதார மந்தநிலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றை சுட்டிக்காட்டி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வரலாறு காணாத வகையில் நாளுக்குநாள் உயர்த்தி வருகின்றன.

இதனால் மராட்டிய அரசு போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழக மந்திரி திவாகர் ராவ்தே கூறி வந்தார். மேலும் டீசல் மீதான வரி குறைக்கப்படாவிட்டால் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டி வரும் என கடந்த மாதம் அவர் கூறி இருந்தார்.

இந்தநிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, மராட்டிய போக்குவரத்து கழக ஊழியர்களின் சமீபத்திய ஊதிய உயர்வு ஆகியவற்றின் காரணமாக வருகிற 15-ந் தேதி முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து இருப்பதாக நேற்று மந்திரி திவாகர் ராவ்தே தெரிவித்தார்.

18 சதவீதம்

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

டீசல் விலை உயர்வு காரணமாக மராட்டிய போக்குவரத்து கழகத்தின் ஆண்டு செலவு ரூ.460 கோடி வரை அதிகரித்துள்ளது. இதுதவிர சமீபத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு காரணமாக ரூ.4 ஆயிரத்து 849 கோடி கூடுதலாக நிதிச்சுமை ஏற்பட்டது. இவற்றால் பஸ் கட்டணத்தை உயர்த்தும் நிலைக்கு மாநில அரசு தள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் 30 சதவீதம் கட்டண உயர்வுக்கு பரிந்துரைத்தனர். ஆனால் பின்னர் அது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான வரிகுறைப்புக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மாநில நிதி மந்திரி சுதிர் முங்கண்டிவார் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்கள் கோரிக்கைக்கு நல்லபடியாக பதிலளித்தனர். ஒருவேளை எனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு டீசல் மீதான வரி குறைக்கப்பட்டால், பஸ் கட்டணம் குறித்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story