ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று கூறுவதா? ஸ்டெர்லைட் அதிகாரிக்கு தூத்துக்குடி மக்கள் கடும் கண்டனம்


ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று கூறுவதா? ஸ்டெர்லைட் அதிகாரிக்கு தூத்துக்குடி மக்கள் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 8 Jun 2018 2:45 AM IST (Updated: 8 Jun 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று கூறிய ஸ்டெர்லைட் அதிகாரிக்கு தூத்துக்குடி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி,

ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று கூறிய ஸ்டெர்லைட் அதிகாரிக்கு தூத்துக்குடி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22–ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த பிரச்சினையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இருந்தாலும் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி இழப்புகளில் இருந்து தூத்துக்குடி மக்கள் இன்னமும் மீளவில்லை.

கொந்தளிப்பு

இதற்கிடையே அந்த ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத், டெல்லியில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ஸ்டெர்லைட் ஆலை ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

இது தூத்துக்குடி மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆலையை மீண்டும் திறக்கப்படுமா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய மக்கள், அதற்கான முயற்சி நடந்தால் போராட்டம் தீவிரமடையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தைரியம் வந்தது எப்படி?

அ.குமரெட்டியபுரத்தை சேர்ந்த மகேஷ்:– ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயக்கப்படும் என்று ஆலை அதிகாரி கூறி இருப்பது எங்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் இந்த பிரச்சினையால் 13 பேரை இழுந்து உள்ளோம். அதன்பிறகுதான் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஆலைக்கு சீல் வைத்து உள்ளது. இதுகுறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை இங்கு இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான பணியை அரசு தொடங்க வேண்டும். அப்போது தான் இதற்கான தீர்வு கிடைக்கும்.

தூத்துக்குடியை சேர்ந்த பிரபு:– ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக நாங்கள் 13 பேரை இழந்து விட்டோம். இனி எங்களிடம் இழக்க ஒன்றும் இல்லை. மீண்டும் அந்த ஆலை தூத்துக்குடி மண்ணில் இயங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. அந்த ஆலையின் அதிகாரிக்கு ஆலையை மீண்டும் தூத்துக்குடியில் இயக்குவோம் என்று கூற எப்படி தைரியம் வந்தது என்று தெரியவில்லை. சிறு கிராமத்தில் தொடங்கிய இந்த போராட்டம், தூத்துக்குடி நகர் முழுவதும் பரவி தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது. ஆலையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் போராட்டம் தீவிரம் அடையும். எதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களுக்கு தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஆதரவாக இருப்பார்கள்.

சிறப்பு தீர்மானம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் கூறியதாவது;–

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எங்களது போராட்டத்தில் 13 பேரை இழந்துள்ளோம். மக்களின் கொந்தளிப்பு இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் ஆலையை மீண்டும் இயக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த ஆலையின் அதிகாரி கூறி இருக்கிறார். அவருக்கு அந்த தைரியத்தை கொடுத்தது யார்?. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது சாத்தியம் இல்லை என்று கூறினார். அதன்பின்னர் ஆலை அதிகாரி அனில் அகர்வால் கோர்ட்டு உத்தரவு பெற்று ஆலையை திறப்போம் என்று கூறி உள்ளார்.

இதனை பார்க்கும் போது, மாநில அரசும், மத்திய அரசும் ஸ்டெர்லைட் ஆலைக்கு துணையாகவும், சாதகமாகவும் உள்ளது போல் தெரிகிறது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என்பது, அந்த ஆலையை இங்கு இருந்து அப்புறப்படுத்துவதுதான் தீர்வாகத்தான் அமையும். எனவே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story