திருச்செந்தூரில் காம்பவுண்டு சுவரில் மொபட் மோதி இளம்பெண் பலி ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றபோது பரிதாப சம்பவம்


திருச்செந்தூரில் காம்பவுண்டு சுவரில் மொபட் மோதி இளம்பெண் பலி ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றபோது  பரிதாப சம்பவம்
x
தினத்தந்தி 7 Jun 2018 8:30 PM GMT (Updated: 7 Jun 2018 7:40 PM GMT)

திருச்செந்தூரில் மொபட் ஓட்ட பழகியபோது காம்பவுண்டு சுவரில் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் மொபட் ஓட்ட பழகியபோது காம்பவுண்டு சுவரில் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார்.

கணினி மைய உரிமையாளர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராஜா மில் ரோடு குமாரபாளையம் வீதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் அப்பகுதியில் கணினி மையம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜோதி (வயது 29). இவர்களுக்கு தியாஸ் (4) என்ற மகனும், தியாஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.

மொபட் ஓட்ட பழகியபோது...

கோடை விடுமுறையை முன்னிட்டு, ஜோதி தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அண்ணன் அருண்குமார் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலையில் ஜோதி தன்னுடைய அண்ணன் மனைவி அனிதாவின் மொபட்டை எடுத்து சென்று, திருச்செந்தூர் ராஜ்கண்ணா நகரில் உள்ள காலி இடத்தில் ஓட்டி பழகினார். அவருடன் அனிதாவும் சென்றார்.

ஜோதி மொபட்டை தனியாக ஓட்டியபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள காம்பவுண்டு சுவரில் மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த ஜோதி உயிருக்கு போராடினார்.

போலீசார் விசாரணை

உடனே அனிதா மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story