நெல்லை மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவரின் 3 கார்கள் தீவைத்து எரிப்பு போலீசார் விசாரணை


நெல்லை மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவரின் 3 கார்கள் தீவைத்து எரிப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Jun 2018 10:00 PM GMT (Updated: 7 Jun 2018 7:48 PM GMT)

நெல்லை மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவரின் 3 கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவரின் 3 கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார்கள் எரிப்பு

நெல்லை மேலப்பாளையம் முகமதுஅலி தெருவை சேர்ந்தவர் முகமது சுபையர். இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். மேலும் இவர் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார். இவரது அலுவலகம் மேலப்பாளையம் நேதாஜி ரோட்டில் உள்ளது. அங்கு விற்பனைக்காக கார்களை முகமது சுபையர் நிறுத்தி வைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அலுவலகம் முன்பு நின்ற 3 கார்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்து உள்ளனர். இதில் கார்களில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து முகமதுசுபையர், மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் வழக்குப்பதிவு செய்து, கார்களுக்கு தீவைத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

போலீஸ் பாதுகாப்பு

மேலப்பாளையம் ஆண்டவர் தெருவை சேர்ந்த முத்தலிக் (வயது 44) என்பவர் நேற்று முன்தினம் உடல்நலம் சரியில்லாமல் இறந்தார். அவரது உடலை அங்குள்ள பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து நெல்லை உதவி கலெக்டர் மைதிலி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கு முத்தலிக் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, கார்களுக்கு தீ வைக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தையொட்டி மேலப்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story