மாவட்ட செய்திகள்

குப்பைகிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட 2 லட்சம் டன் குப்பைகள் மறுசுழற்சிக்காக அகற்றம் + "||" + Removal of 2 lakh tonnes of rubbish in the garbage disposal

குப்பைகிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட 2 லட்சம் டன் குப்பைகள் மறுசுழற்சிக்காக அகற்றம்

குப்பைகிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட 2 லட்சம் டன் குப்பைகள் மறுசுழற்சிக்காக அகற்றம்
கும்பகோணம் நகராட்சி குப்பைகிடங்கில் சேமித்து வைக்கப்பட்ட 2 லட்சம் டன் குப்பைகள் மறுசுழற்சிக்காக அகற்றப்பட்டுள்ளது.
கும்பகோணம்,

கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டின் அருகே உள்ளது தேப்பெருமாநல்லூர். இது கும்பகோணத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு 25 ஏக்கர் இடம் கும்பகோணம் நகராட்சியின் அவசிய தேவைக்காக வாங்கப்பட்டது. இதில் 10 ஏக்கர் பரப்பளவில் கடந்த 20 ஆண்டுகளாக கும்பகோணத்தில் உள்ள வீடுகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் போன்றவற்றிலிருந்து ஆண்டுக்கு 70 டன் குப்பைகள் தனியார் ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு லாரிகள் மூலம் தேப்பெருமாநல்லூரில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வைக்கப்படுகிறது. 23 ஆண்டுகளுக்கு முன் நகராட்சியால் வாங்கப்பட்ட இந்த இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில் 10 ஏக்கர் பரப்பளவில் மலை போல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டது. தினமும் குப்பைகள் குவிவதால் இதனை மறுசுழற்சிக்காக பிரிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதைதொடர்ந்து ஒரு தனியார் நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த திட்டத்தை ஏற்று நடத்த ஒப்பந்தம் செய்துகொண்டது.


10 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைகளை தினமும் எந்திரத்தின் மூலம் பாலித்தீன் பைகள், சாக்குகள், தேங்காய் சிரட்டைகள், ரப்பர்கள், செருப்புகள், டயர்கள், தேங்காய் நார்கள், இரும்புகள் என 15 வகையான பொருட்களை தனித்தனியாக பிரித்தும், குப்பையில் உள்ள மக்கிய மண் பிரிக்கப்பட்டு அவை உரமாக தயாரிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு 1.40 லட்சம் டன் குப்பைகள் இருந்தது. மேலும் கடந்த 2016-ம் ஆண்டு மகாமகத்தின் போது 60 ஆயிரம் டன் குப்பைகள் சேர்ந்தது. மொத்தம் 2 லட்சம் டன் குப்பைகளும் தரம் பிரிக்கப்பட்டு அவை மறுசுழற்சிக்காக வெளியே அனுப்பப்பட்டது. மலைபோல் குவிந்திருந்த குப்பைகளை அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

முன்னதாக கும்பகோணம் கரிக்குளத்தில் உள்ள குப்பை சேமிப்பு கிடங்கை நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கும்பகோணம் நகராட்சியில் குவிந்திருந்த குப்பைகளை அகற்ற கடந்த 2015-ம் ஆண்டு ஒரு தனியார் அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. 2 லட்சம் டன் குப்பைகளை 3 ஆண்டுகளாக தரம் பிரித்து அவை அகற்றப்பட்டது. இதற்காக எந்திரங்களும், 80 தொழிலாளர்களும் நாள்தோறும் பணியாற்றி வந்தனர்.

கும்பகோணம் நகராட்சியில் மலைகள் போல் குப்பை கிடங்கில் குப்பைகள் தேங்கியிருந்தது. இந்தியாவிலேயே முதன்முறையாக கும்பகோணம் நகராட்சியில் குப்பைகளை தரம்பிரிக்க தனியாரிடம் அந்த பணியை ஒப்படைத்தோம். 10 ஏக்கரில் 2 லட்சம் டன் குப்பைகள் தேங்கியிருந்தது. இந்த குப்பைகள் அனைத்தும் தரம்பிரிக்கப்பட்டு அவை மறுசுழற்சிக்காக வெளியே அனுப்பப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த பொருட்கள் அனைத்தும் வெவ்வேறு மூலப்பொருட்களாக தயாரிக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முறையாக கும்பகோணம் நகராட்சியில் தான் குப்பைகள் மறுசுழற்சிக்காக வெளியே அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 500 மாவட்ட கலெக்டர்களுடன் குப்பைகள் மறுசுழற்சி தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கும்பகோணம் நகராட்சி மறுசுழற்சி பணிகளை முன்மாதிரி பணியாக விவாதிக்கப்பட்டது. மேலும், புதுடெல்லியில் அனைத்து மாநில நகராட்சி ஆணையர்களுடன் நடைபெற்ற கருத்தரங்கில் கும்பகோணம் நகராட்சி குப்பைகள் மறுசுழற்சி தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் பணிகளில் முன்மாதிரி பணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.