மனைவி கொலை: தலைமறைவான வடமாநில தொழிலாளி சென்னையில் கைது


மனைவி கொலை: தலைமறைவான வடமாநில தொழிலாளி சென்னையில் கைது
x
தினத்தந்தி 8 Jun 2018 4:15 AM IST (Updated: 8 Jun 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் குடும்பத்தகராறில் மனைவியை கொன்று விட்டு குழந்தைகளுடன் தலைமறைவான வடமாநில தொழிலாளி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ரெயிலில் பீகாருக்கு தப்ப முயன்றபோது சிக்கினார்.

சென்னை,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நவுசத் (வயது 35). இவரது மனைவி கோதல் (32). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நவுசத் குடும்பத்துடன் கேரள மாநிலம் மலப்புரத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி கோதலை, நவுசத் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தனது 2 குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நவுசத், டன்பாத் ரெயில் மூலம் பீகாருக்கு தப்பிச்செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து கேரள போலீசார் சென்னை சென்டிரல் ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் சென்னை சென்டிரல் வந்த டன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில், இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயிலில் பீகாருக்கு தப்ப முயன்றபோது சிக்கினார். ரெயிலில் தனது 2 குழந்தைகளுடன் இருந்த நவுசத்தை போலீசார் கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Next Story