மாவட்ட செய்திகள்

திருவேங்கடம் அருகே ஒரே நாள் இரவில் துணிகரம் ராணுவ வீரர்–விவசாயி வீடுகளில் 51 பவுன் நகைகள் கொள்ளை + "||" + One day night Soldier-farmer's homes 51 pound jewelry robbery

திருவேங்கடம் அருகே ஒரே நாள் இரவில் துணிகரம் ராணுவ வீரர்–விவசாயி வீடுகளில் 51 பவுன் நகைகள் கொள்ளை

திருவேங்கடம் அருகே ஒரே நாள் இரவில் துணிகரம் ராணுவ வீரர்–விவசாயி வீடுகளில் 51 பவுன் நகைகள் கொள்ளை
திருவேங்கடம் அருகே ராணுவ வீரர்–விவசாயி வீடுகளில் 51 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவேங்கடம்,

திருவேங்கடம் அருகே ராணுவ வீரர்–விவசாயி வீடுகளில் 51 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணுவ வீரர்

நெல்லை மாவட்டம் திருவேங்கடத்தை அடுத்த புதுப்பட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் குமார் (வயது 30). இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவில் குமார் தன்னுடைய மனைவி மரியசெல்வம் மற்றும் பெற்றோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் நைசாக குமார் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து, அதில் இருந்த 45 பவுன் தங்க நகைகள், ரூ.17 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

தங்க சங்கிலி பறிக்க முயற்சி

அப்போது மர்மநபர்களில் ஒருவர், வீட்டில் தூங்கி கொண்டிருந்த மரியசெல்வம் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது கண்விழித்த அவர் ‘திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார். உடனே மர்மநபர் வெளியே தப்பி ஓடினார். தொடர்ந்து வீட்டின் வெளியே இருந்த மர்மநபர்களும் இருளில் தப்பி ஓடினர்.

இதையடுத்து குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் மர்மநபர்களை விரட்டிச் சென்றனர். ஆனாலும் மர்மநபர்கள் காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓடி விட்டனர். பின்னர் குமார் தனது வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டில் உள்ள பீரோவில் இருந்த நகைகள்–பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று திருவேங்கடத்தை அடுத்த குறிஞ்சாகுளத்தைச் சேர்ந்தவர் அய்யலுசாமி மகன் ராமசுப்பு. விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவில் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் ராமசுப்புவின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து, அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

நேற்று காலையில் ராமசுப்பு தனது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததையும், பீரோவில் இருந்த நகைகள்–பணம் திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பெண் போலீஸ் ஏட்டு வீட்டில்...

இதேபோன்று அதே பகுதியைச் சேர்ந்த பெண் போலீஸ் ஏட்டுவான ராஜலட்சுமியின் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ராஜலட்சுமி குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவர் திருவேங்கடத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு எந்த பொருட்களும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோன்று பக்கத்து ஊரான காசிலிங்கபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் திருடுவதற்காக நள்ளிரவில் மர்மநபர் நுழைந்துள்ளார். உடனே அந்த வீட்டில் உள்ள பெண் கூச்சலிட்டதால், மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து குமார், ராமசுப்பு ஆகியோர் அளித்த புகார்களின்பேரில், திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயகுமார் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளை நடந்த இடங்களில் பதிவான கைரேகைகள், தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

கொள்ளை நடந்த ராணுவ வீரர் குமாரின் வீட்டில் மோப்பம் பிடித்த போலீஸ் மோப்ப நாய், காட்டு பகுதி வழியாக கோவில்பட்டி ரோட்டில் சங்குபட்டி விலக்கு பெட்ரோல் பங்க் வரையிலும் ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திருவேங்கடம் அருகே ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.