வேலூர் கோர்ட்டில் 145 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்


வேலூர் கோர்ட்டில் 145 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
x
தினத்தந்தி 7 Jun 2018 10:45 PM GMT (Updated: 7 Jun 2018 8:19 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. முதல் கட்டமாக வேலூர் கோர்ட்டில் 145 கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

வேலூர்,

பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் அனைத்து கோர்ட்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, காட்பாடி, குடியாத்தம், திருப்பத்தூர் என அனைத்து பகுதிகளிலும் உள்ள கோர்ட்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இங்கு புதிய கோர்ட்டு கட்டிடம், பழைய கோர்ட்டு கட்டிடம் என 2 கட்டிடங்களில் 20-க்கும் மேற்பட்ட கோர்ட்டுகள் செயல்பட்டு வருகிறது.

இந்த கோர்ட்டு அரங்குகள், கோர்ட்டுக்கு வெளிப்பகுதி, வாகன நிறுத்தங்கள், கோர்ட்டு நுழைவு வாயில்கள் என அனைத்துப் பகுதிகளிலும் 145 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதில் பெரும்பாலான கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. அதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளிலும் சேர்த்து மொத்தம் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

இந்த பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story