மானிய கடன் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் வங்கியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


மானிய கடன் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் வங்கியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 8 Jun 2018 4:00 AM IST (Updated: 8 Jun 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மானிய கடன் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என வங்கியாளர்களுக்கு கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில் கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் முன்னுரிமை கடன் திட்டங்களுக்காக ரூ.5 ஆயிரத்து 775 கோடியும், வேளாண்மை கடன் திட்டங்களுக்காக ரூ.3 ஆயிரத்து 343 கோடியும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ.969 கோடியும், கல்வி கடனாக ரூ.85 கோடியும், வீட்டுக் கடனாக ரூ.205 கோடியும் வழங்க கடன் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.

மானிய கடன் திட்டங்கள்

இதில் ஆண்டு கடன் திட்ட அறிக்கையில் தயாரிக்கப்பட்ட இலக்கீட்டின்படி கல்விக்கடன் வழங்குதல், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கடன் வழங்குதல், மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு வழங்கப்படும் பொருளாதார கடன்கள், சுழல் நிதி கடன்கள், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கடன் உதவி திட்டங்கள், மாவட்ட தொழில்மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வேலை உருவாக்கும் திட்டம் உள்ளிட்ட தொழில் முனைவோர் திட்டங்களுக்கு வழங்கப்படும் கடன்கள், பால்பண்னை, கோழி பண்னைகளுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் என பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தங்கள் பகுதி்யில் நடப்பு மாதம் வரை எய்த கடன் வழங்கும் இலக்குகள் குறித்து கலெக்டர் விரிவாக ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் பேசும்போது, வங்கியாளர்கள் கடன் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்கையும் எட்ட வேண்டும், அனைத்து அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங் களையும் விரைவாக செயல் படுத்திட வேண்டும், என்றார்.

இந்த கூட்டத்தில் இந்தியன் வங்கியின் ஈரோடு மண்டல மேலாளர் சுசிலா பார்த்தசாரதி, ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் சேதுராமன், நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் தினேஷ், இந்தியன் வங்கி உதவி பொதுமேலாளர் தாமோதரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு உள்பட வங்கியாளர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story