மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை 2 முன்னாள் மந்திரிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டம்


மந்திரி பதவி கிடைக்காததால்  காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை  2 முன்னாள் மந்திரிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2018 11:00 PM GMT (Updated: 7 Jun 2018 9:56 PM GMT)

மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

பெங்களூரு,

மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். 2 முன்னாள் மந்திரிகள் தலைமையில் தனித்தனியாக கூடி நேற்று ஆலோசனை நடத்தினர். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணை முதல்–மந்திரி

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பலருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.

லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தனக்கு துணை முதல்–மந்திரி பதவி வேண்டும் என்று எம்.பி.பட்டீல் கேட்டார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கூட கிடைக்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். கட்சிக்காகவும், லிங்காயத் சமூகத்திற்காகவும் பாடுபட்ட தன்னை, கட்சி புறக்கணித்துவிட்டதாக எம்.பி.பட்டீல் கூறினார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

இந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காததால், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முன்னாள் மந்திரி எம்.பி.பட்டீல் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று நடைபெற்றது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சதீஸ் ஜார்கிகோளி, எம்.டி.பி.நாகராஜ், ரோ‌ஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து அவர் கருத்துகளை கேட்டு அறிந்தார். காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் அங்கு வந்து எம்.பி.பட்டீலை சந்தித்து பேசிவிட்டு சென்றார். தினேஷ் குண்டுராவுக்கு, எம்.பி.பட்டீலின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர்.

கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய எம்.பி.பட்டீல், “எனக்கு மந்திரி பதவி கிடைக்காதது மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மந்திரிசபை விரிவாக்கத்தின்போது வாய்ப்பு கிடைக்காதது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு சுயமரியாதை உள்ளது. நான் இனி பதவி தாருங்கள் என்று கேட்கமாட்டேன். காங்கிரசில் நான் ஒன்றும் 2–ம் தர குடிமகன் கிடையாது. கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தவன். நாங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டோம். கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். நாங்கள் தனியாக கூட்டம் நடத்துவதில் என்ன தவறு உள்ளது. ஊடகங்கள் தான் இதை பெரிதுபடுத்துகின்றன’’ என்றார்.

நடத்திய விதம் சரியல்ல

சதீஸ் ஜார்கிகோளி கூறும்போது, “மந்திரி பதவி கிடைக்காதது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது உண்மை தான். திறமையானவர்கள் குறித்து கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைமையின் கவனத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து விவாதித்தோம். நேற்றும்(அதாவது நேற்று முன்தினம்) இதுகுறித்தே ஆலோசித்தோம். நாங்கள் மீண்டும் கூடி ஆலோசிப்போம்’’ என்றார். அதேபோல் அதிருப்தியில் உள்ள மற்றொரு முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல் தலைமையில் தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நடந்தது. இதில் எஸ்.ஆர்.பட்டீல் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் எச்.கே.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், “கட்சியில் என்னை போன்ற மூத்த தலைவர்களை நடத்திய விதம் சரியல்ல. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இதுதொடர்பாக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். அந்த திசையில் நாங்கள் சில முடிவுகளை எடுப்போம். செயல்பாடுகள் உள்பட அனைத்து வி‌ஷயங்கள் குறித்தும் கட்சி மேலிடம் பரிசீலித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். நான் கட்சியை விட்டு விலகும் பேச்சுக்கே இடம் இல்லை’’ என்றார்.

ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்தினர்

அதேபோல் ஹாவேரி மாவட்டம் ஹிரேகூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி.பட்டீல். மந்திரி பதவி கிடைக்காததால் அவருடைய ஆதரவாளர்கள் நேற்று அங்கு போராட்டம் நடத்தினர். டயர்களை ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்து ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து பி.சி.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், “எந்த அடிப்படையில் புதிய மந்திரிகளை நியமனம் செய்தனர் என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கேட்டேன். ஆனால் கட்சியினர் என்னை புறக்கணித்துவிட்டனர். கட்சியில் நேர்மையாக இருப்பவர்களுக்கு மதிப்பு இல்லை. எனது அடுத்தகட்ட முடிவு குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசிப்பேன்’’ என்றார்.

அரசியலில் பரபரப்பு

சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பெலகாவியில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சதீஸ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவியை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மந்திரி பதவி கேட்டு ரகுமூர்த்தி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் செல்லக்கெரேயில் போராட்டம் நடத்தினர்.

இதேபோல் பெங்களூருவில் ரோ‌ஷன் பெய்க்கின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் ரோ‌ஷன் பெய்க்கிற்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்துவதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமோ? என்ற இக்கட்டான நிலை எழுந்துள்ளது.

மீண்டும் விரிவாக்கம்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ள நிலையில் அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்–மந்திரியுமான பரமேஸ்வர் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று அதிருப்தியாளர்களை சமாளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார், கே.ஜே.ஜார்ஜ் மற்றும் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மந்திரிசபையை மீண்டும் விரிவாக்கம் செய்யும்போது, எம்.பி.பட்டீல், ஆனந்த்சிங் உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி வழங்கலாமா? என்பது பற்றியும் அவர்கள் ஆலோசித்தனர். மற்ற அதிருப்தியாளர்களுக்கு வாரிய தலைவர் பதவியை வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் தற்போது கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story