லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்


லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Jun 2018 10:28 PM GMT (Updated: 7 Jun 2018 10:28 PM GMT)

லட்சியத்தை அடைய பள்ளி மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரை கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மத்திய அரசின் நிதியின் கீழ், மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதிகளையொட்டி வாழ்ந்து வரும் கோத்தர், தோடர், இருளர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் குழந்தைகள் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பள்ளி மாணவர்களுக்கு கோட், சீருடைகளை வழங்கி மாணவர்களுடன் கலந்துரையாடி னார். அப்போது கலெக்டர் பேசியதாவது:-

பள்ளி குழந்தைகள் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, பிரதமர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு படிக்க வேண்டும். குறிப்பேட்டில் எழுதி வைத்து, தினமும் படித்து பார்த்தால் அது ஊக்கம் தரும். மாணவர்கள் ஒவ்வொருவரும் லட்சியத்தை நிர்ணயித்து, அதனை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுப்பதுடன், நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் உயர்கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்து, உங்களது லட்சியத்தை நிறைவேற்றி வாழ்க்கையில் முன்னேற முடியும்.

அதிஷ்டத்தால் லட்சியத்தை அடைய முடியாது. நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் போது, நண்பர்கள் மூலம் இடையூறு ஏற்படலாம். ஆனால், இடையூறுகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் லட்சியத்திற்காக முயற்சி செய்ய வேண்டும். காலத்திற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொண்டு அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது சில மாணவர்கள் கலெக்டருடன் ஆங்கிலத்தில் பேசி அசத்தினர். பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பாராட்டி வாழ்த்தினார். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைமன்னன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் கூறியதாவது.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி தொடங்கும் போது, 35 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் 74 பேர் படித்தனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆதிவாசி கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2018-2019-ம் கல்வியாண்டில் பள்ளியில் 165 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் புதியதாக 91 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை நிதி மூலம் இயங்கி வரும் இப்பள்ளியில் மாணவர்களுக்கு முதல் முறையாக கோட் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு ஆங்கிலம் எளிய முறையில் கற்று கொடுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story