உத்தவ் தாக்கரேயுடன் அமித்ஷா சந்திப்பு: சிவசேனா தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றம் இல்லை சஞ்சய் ராவுத் அறிவிப்பு


உத்தவ் தாக்கரேயுடன் அமித்ஷா சந்திப்பு: சிவசேனா தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றம் இல்லை சஞ்சய் ராவுத் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2018 4:15 AM IST (Updated: 8 Jun 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

உத்தவ் தாக்கரேயுடன் அமித்ஷா சந்திப்பின் எதிரொலியாக சிவசேனா தனித்து போட்டியிடும் முடிவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என சஞ்சய் ராவுத் தெரிவித்தார்.

மும்பை, 

உத்தவ் தாக்கரேயுடன் அமித்ஷா சந்திப்பின் எதிரொலியாக சிவசேனா தனித்து போட்டியிடும் முடிவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என சஞ்சய் ராவுத் தெரிவித்தார்.

அமித்ஷா சந்திப்பு

மராட்டியத்தில் ஆளும் கூட்டணியான பா.ஜனதா-சிவசேனா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்து போட்டி யிடப்போவதாக சிவசேனா கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயும் வரும் தேர்தல்களில் சிவசேனா தனித்து போட்டியிடும் என அறிவித்தார்.

இந்தநிலையில் சிவசேனா வுடனான உறவை மேம் படுத்தும் வகையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று முன்தினம் மும்பை வந்தார்.. இதையடுத்து அவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை மும்பையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

சுமார் 2 மணி நேரம் நடந்த உத்தவ் தாக்கரே-அமித்ஷா சந்திப்பு குறித்து இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலும் வெளியிடவில்லை. அமித்ஷா வருகிற 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா உடனான கூட்டணியில் தொடருமாறு உத்தவ் தாக்கரேயை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

முடிவில் மாற்றம் இல்லை

இந்தநிலையில் மும்பையில் நிருபர்களை சந்தித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத், வருகிற தேர்தலில் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடப்போவது தொடர்பாக சிவசேனா எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

சிவசேனா தலைமையால் எடுக்கப்பட்ட முடிவை வேறொரு கட்சியை சேர்ந்த தலைவர்(அமித்ஷா) மாற்றம் செய்ய முடியாது. சிவசேனாவோ அல்லது உத்தவ் தாக்கரேயோ தான் தங்களுக்கான முடிவை நிர்ணயம் செய்வர். வருகிற 2019-ம் ஆண்டு தேர்தலில் சிவசேனா கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கப்போவதாக கூறப் படுவதில் உண்மை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அமித்ஷா சந்திப்பை தொடர்ந்து சிவசேனா-பா.ஜனதா இடையேயான மோதல் போக்கு சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சஞ்சய் ராவுத்தின் பேட்டி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story