நின்ற நிலையில் மோட்டார்சைக்கிளை ஓட்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் பெண்


நின்ற நிலையில் மோட்டார்சைக்கிளை ஓட்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் பெண்
x
தினத்தந்தி 7 Jun 2018 11:59 PM GMT (Updated: 7 Jun 2018 11:59 PM GMT)

இயற்கையோடு பெண்மையை காப்போம் என்ற கோஷத்துடன் நின்ற நிலையில் மோட்டார்சைக்கிளை ஓட்டி விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் பெண் நேற்று ஈரோடு வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈரோடு,

நீலகிரி மாவட்டம் கூடலூர் மன்வியல் பகுதியை சேர்ந்தவர் சைபி (வயது 45). இவர் தற்போது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வசித்து வருகிறார். சைபி, உலக சாதனைக்காகவும், இயற்கையோடு பெண்மையை இணைந்தே காப்போம் என்ற விழிப்புணர்வு பிரசார கோஷத்துடனும் ஊட்டியில் இருந்து தனது மோட்டார்சைக்கிள் பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் இங்கிருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் நின்ற நிலையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்றார். இதை பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.

சைபியின் பாதுகாப்புக்காக ஒரு ஆம்புலன்சும், போலீஸ் வாகனமும் உடன் சென்றது. முன்னதாக இதுகுறித்து சைபி நிருபர்களிடம் கூறியதாவது.

சிறு வயதில் இருந்தே பெண்கள் பாதுகாப்பு குறித்தும், இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளேன். தற்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நின்ற நிலையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். வருகிற 13-ந்தேதி சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் எனது பயணத்தை நிறைவு செய்கிறேன். தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை மோட்டார்சைக்கிளில் நின்றபடியே பயணம் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story