மாவட்ட செய்திகள்

போலி ஏ.டி.எம். கார்டு மோசடி: தலைமறைவாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா கைது + "||" + Fake ATM Card fraud Was in the hollow NR Congress Satya arrested

போலி ஏ.டி.எம். கார்டு மோசடி: தலைமறைவாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா கைது

போலி ஏ.டி.எம். கார்டு மோசடி: தலைமறைவாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா கைது
போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மற்றவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா கைது செய்யப்பட்டார். மற்றொரு முக்கிய குற்றவாளியை போலீசார் நெருங்கினர்.
புதுச்சேரி,

புதுவையில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் மோசடி செய்வதாக அடுத்தடுத்து வந்த புகாரை தொடர்ந்து சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.


இந்த மோசடி தொடர்பாக லாஸ்பேட்டை லட்சுமிநகர் பாலாஜி (வயது 26), முருங்கப்பாக்கம் சந்துரு (30) உள்பட 5 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் முக்கிய தொடர்பு உடைய அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி, முதலியார்பேட்டை என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்பட பலரை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வியாபாரிகளான ரெட்டியார்பாளையம் சிவக்குமார், லாஸ்பேட்டை டேனியல் சுந்தர் சிங் (33) மற்றும் குரும்பாபேட் கணேசன்(33), சோலைநகர் அப்துல் சம்பத் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் தங்களிடம் உள்ள ‘சுவைப்’ எந்திரத்தை முக்கிய குற்றவாளி சந்துருஜியிடம் வழங்கியுள்ளனர். அவர் அதன் மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் சுருட்டியது தெரியவந்தது.

இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யாவை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். அவர் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வந்தார். தனிப்படை போலீசாரும் அவரது செல்போன் எண்ணை வைத்து அவரை பின்தொடர்ந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று சத்யாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புதுவை கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடம், இந்த மோசடியில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது. எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சத்யா, சந்துருஜி ஆகியோருக்கு ‘சுவைப்’ எந்திரம் வழங்கியதாக பலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜியை போலீசார் தேடி வருகின்றனர். அவர் கோர்ட்டில் சரணடைய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அவர் கோர்ட்டில் சரண் அடைவதற்கு முன்பாக கைது செய்ய போலீசார் திட்டமிட்டு நெருங்கி உள்ளனர். எனவே கோர்ட்டு வளாகத்தில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.