சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கு: வேல்முருகனுக்கு, 22–ந் தேதி வரை காவல் நீட்டிப்பு


சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கு: வேல்முருகனுக்கு, 22–ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2018 4:45 AM IST (Updated: 9 Jun 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகனுக்கு 22–ந் தேதி வரை காவல் நீட்டிப்பு என உளுந்தூர்பேட்டை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

விழுப்புரம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1–ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சுங்கச்சாவடி அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் கடந்த 26–ந் தேதி கைது செய்யப்பட்ட வேல்முருகன், நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் வேல்முருகனை நேற்று அழைத்து சென்றனர்.

ஆனால் உளுந்தூர்பேட்டை நீதிபதி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றதால் அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் வேல்முருகனை போலீசார், விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அங்கு இந்த வழக்கை விசாரித்த உளுந்தூர்பேட்டை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) லதா, வேல்முருகனுக்கு வருகிற 22–ந் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். எனவே விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேல்முருகனை போலீஸ் வேனில் ஏற்றி சென்னை புழல் சிறைக்கு போலீசார் அழைத்துச்சென்றனர்.


Next Story